மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை திங்கட்கிழமை (30) தாக்கல் செய்தது.
மேற்குறிப்பிடப்பட்ட மூவரும் உயர்தர பரீட்சைக் காலத்தில் தொடர் மின் விநியோகம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பித்த உடன்படிக்கைக்கு இணங்கத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்து மனுத்தாக்கல் செய்துள்ளது.
பெப்ரவரி 17 வரை இடம்பெறவுள்ள உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மேற்படி தரப்பினர் சமரசம் செய்து கொண்ட போதிலும், இலங்கை மின்சார சபை வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் வகையில் தீர்வைப் புறக்கணித்து மின்வெட்டைத் தொடர்ந்ததாக ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.