சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடாத்தப்பட்டது.
நாங்கள் உண்மைக்காகவும் நீதிக்காவும் தொடர்ந்து போராடுவோம் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கபட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணம் தழுவியதாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தேவாலயத்திலிருந்து காந்திபூங்கா வரையில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு பேரணியில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களிலிருந்து கலந்துகொண்ட ஐந்தூறுக்கும் அதிகமான வலிந்துகாணாமல்ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கபட்டோர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்களான அருட்பணி க.ஜெகநாதன் அடிகளார்,எஸ்.சிவயோகநாதன் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதி பிரதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘எம் பிள்ளைகள் வரும் வரையில் எங்கள் போராட்டம் ஓயாது,சிறிலங்கா அரசே இறுதி யுத்ததில் சரணடைந்த எங்கள் பிள்ளைகள் எங்கே, சிறிலங்கா அரசே எம் மழலைகளை என்ன செய்தாய்,பெற்ற வயிறு எரியுதடா என் மகனே எப்போது வருவாய்,காணாமல்ஆக்கிய பிள்ளைகள் எங்கே சிறிலங்கா அரசே பதில் கூறு’போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது திருமலை வீதியுடாக மட்டக்களப்ப காந்திபூங்கா வரையில் பேரணி வருகைதந்ததுடன் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ‘இராணுவதே எமது நிலத்திலிருந்து வெளியேறு,எமது நிலம் எமக்கு வேண்டும்,தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்,மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்,இறுதி யுத்ததின்போது கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே,மனித உரிமைகள் தினம் எங்களுக்கு கரிநாள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
பேரணியானது காந்திபூங்காவினை சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்தார்.
இதன்போது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்று இதன்போது வாசிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அப்துல் லத்தீப் இஸ்ஸதீனிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் தமிழர்களை இனப் படுகொலை செய்தும் வலிந்து காணாமல் ஆக்கியும் தமிழர்களை பாரபட்சமாகவே நடாத்தி வந்திருக்கின்றது. எங்களுக்கான நீதி கூட இலங்கை அரசிடமிருந்து கிடையாது, ஏனெனில் இங்கு சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதி. எமக்கான நீதியை சர்வதேசமும் ஐ.நா வுமே வழங்க வேண்டும்.
காலம் கடந்த நீதி, நீதி மறுக்கப்பட்டமைக்குச் சமன். இலங்கை அரசு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தை முடிப்பதற்கு முன் எங்கள் உறவுகளை தேடி எங்களிடம் ஒப்படைக்க சர்வதேசமும், ஐ.நா வும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா.மனித உரிமைகள்பேரவையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.சாணக்கியன் ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.