கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கௌரவம் வழங்கினார்.

 
 

 
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இவ்வருடத்துடன் ஓய்வு பெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  (29) மட்டக்களப்பு மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பங்குபற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பெரிதும் பங்காற்றிய மாவட்ட செயலாளருக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், பொன்னாடை போர்த்தி, நினைவு சின்னத்தை வழங்கி கௌரவித்தார்.
.
அத்துடன் மாவட்டத்தில் இன்னும் நிறைவு பெறாத ஏழைகளின் பிரச்சினைகளை எதிர்காலத்தில் தீர்க்க வேண்டும் என்பதில் அவதானம் செலுத்தியதுடன், காணி, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளை வேண்டி நிற்கும் ஏழை மக்களுக்கு அதற்கான வசதிகளை வழங்கி, அவர்களை உற்பத்தி மற்றும் விவசாயத்துறைகளில் ஈடுபடுத்தி, அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டம் அவசியமாகும் என்பதை அதிகாரிகளிடம் தெரிவித்தார், அத்துடன் இதனூடாக மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இராஜாங்க அமைச்சருடன் இணைந்து மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டதில் தான் சந்தோசமடைவதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு தான் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆ.தேவராஜ்,மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் தனிப்பட்ட செயலாளர் த.தஜிவரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி,மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.