தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கோறளைப்பற்று பிரதேசமட்ட கூட்டம்!!

 






கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் இராஜாங்க அமைச்சின் ஊடாகவும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஊடாகவும் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வாழைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன் போது வரவு செலவுத் திட்டத்தின் மூலம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும்,  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பங்களிப்பின் ஊடாக நடைமுறைப் படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும், மாவட்டத்தில் எவ்வாறான முதலீடுகளை முன்வைக்க முடியும் என்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஷோபா ஜெயரஞ்சித், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கட்சியின் பிரதம பொருளாளர் ஆ.தேவராஜ், தேசிய அமைப்பாளர் த.தஜீவரன், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.