போலி உறுதி மூலம் காணி மோசடி --சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேர் விளக்க மறியலில் ?

 


போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் கட்டளையிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. 

அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார்,
இந்த வழக்குடன் தொடர்புடைய உறுதியை நிறைவேற்றிய நொத்தாரிசான சட்டத்தரணி ஒருவரும் மற்றைய சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி கையூட்டு குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு பதவியில் இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். 

குறித்த வழக்குடன் தொடர்புடைய 09 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

முதலாம் இரண்டாம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி பி.அபிதனின் அனுசரணையில் மூத்த
சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா முன்னிலையானார்.

  3ஆம் 5்ஆம் 6ஆம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ரமணனும் 7ம், 8ம் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ரஜிந்தனின் அனுசரணையில் மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும் 9ஆவது சந்தேக நபரான நொத்தாரிசான சட்டதரணி சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி எஸ்.பரமராஜா, மூத்த சட்டத்தரணி எம்.றெமிடியஸ் உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட சட்டதரணிகளும் முன்னிலையாகினர்.

விசாரணைகள் தொடர்பில் மன்றில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர், புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க விண்ணப்பம் செய்தனர்.

சந்தேக நபர்கள் 9 பேர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

இதனையடுத்து, குறித்த 9 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார். (a)


  Comments - 0



அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .