புதிய கல்வி சீரமைப்பின் ஊடாக பல புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம் - பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு.










புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக பல புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம் என மட்டக்களப்பில் இடம்பெற்ற Aaro 360 டிஜிட்டல் இலத்திரனியல் செயலியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில், 

டிஜிட்டல் மயமாக்கல் தொழில் நுட்பம் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக இருக்கின்றது, எமது அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரம் எனும் ஒரு அமைச்சினை உருவாக்கி அதனூடாக பல நல்ல விடையங்களை முன்னெடுத்து வருகின்றது, அதில் விசேடமாக Gopay என்ற அப்பினையும் உருவாக்கியுள்ளோம். 

தற்போது வீட்டில் இருந்தவாறே  அரச துறைக்கான கட்டணங்களை செலுத்தி தமக்கான சேவையினை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியினை எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாது உங்களது பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழினை கூட வீட்டில் இருந்தவாறு பெற்றக்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியினை நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம். 
அதனையும் தாண்டி தற்போது போக்குவரத்து பொலிசாரின் தண்டப்பணங்களை கட்டுவதற்காகவும்  டிஜிட்டல் மயமாக்கலை உருவாக்கியுள்ளோம். 

எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல ஊழல் மோசடிகள் நிறைந்த ஒரு நாடாக காணப்பட்டது. இப்போது நாங்கள் அந்த ஊழல் மோசடிகள், இலஞ்ச ஊழல்களை வெகுவாக குறைத்து வருகின்றோம். ஊழல் மோசடி குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டிருக்கின்றது. வெகு விரைவில் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையினை செய்துவருகின்றோம். 

எம்மை அண்மித்த இந்தியா போன்ற நாடுகளில் புதிய தொழில் நுட்பங்களின் ஊடாக தங்களது சேவைகளை அவர்கள் விஸ்தீரணம் செய்திருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக அந்த நாடுகள் முன்னேற்றம் காண்பதற்கு அந்த தொழில்நுட்பமும் முக்கிய வகிபாகம் கொண்டுள்ளது.
அதனைப் போன்று நாங்களும் எமது நாட்டில் இவ்வாறான தொழில்நுட்ப முறைமைகளை கையாண்டு நாட்டை ஒரு வளர்ச்சிப் பாதைக்கு மாற்றுவதுதான் எமது நோக்கமாக இருக்கின்றது. 

இன்று எமது அரசால் புதிதாக உருவாக்கியிருக்கின்ற கல்வி சீர்திருத்தத்தம் தொடர்பான விடையம் ஒரு பேசு பொருளாகிக்கொண்டு வருகின்றது. 

இந்த நாட்டில் புதிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்று கல்வி முறையிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் எமது அரசின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது. 

உலகலாவிய ரீதியில் ஒரு வளர்ச்சிப் பாதையில் அந்தந்த நாடுகள் முன்னேறி வருவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது கல்வித்துறை, அந்த கல்வித்துறையின் ஊடாக பல விடையங்களை அந்த நாடுகள் முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றது. அவ்வாறாக அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு கல்வித் துறைதான் மிக முக்கிய பங்காற்றி வந்துள்ளது. 

அதைப் போன்றுதான் நாங்களும் இந்த கல்வி சீரமைப்பை உருவாக்கியுள்ளோம். கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் பல கல்வி சீர்திருத்தங்கங்களை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் இறுதியில் தோல்வி கண்ட விடையங்களாகவே அமைந்திருந்தது. ஆனால் எங்களது பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கல்வி சீரமைப்பானது விசேடமாக பல நல்ல விடையங்களை உள்ளடக்கியுள்ளது. நவீன முறைமையிலான விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதே பழைய மனப்பாடம் பண்னும் முறைமையினை கொண்டு ஒரு பரீட்சை ஒன்றை எழுதி சித்தியடைந்து தொழிலிற்காக செல்லும் போது அவர்களால் சரியான இலக்கை அடைய முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த புதிய கல்வி சீரமைப்பின் ஊடாக புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். தொழில் ரீதியாக அவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்து செல்லும்போது ஒரு தொழில் வல்லுணர்களாக செல்லக் கூடிய விதமாக இந்த கல்வி சீர்திருத்தம் அமைந்திருக்கின்றது.

சிறந்த பல நல்ல விடையங்களை நாங்கள் சேர்த்துள்ளோம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பவர்கள் அதில் இருக்கும் சொற்பதங்களைத்தான் தவறிழைத்துள்ளது போன்று எதிர்ப்பினை தெரிவிக்கின்றார்களே தவிர அவர்களுக்கும் சரியான புரிதல் இல்லை என்பதைத்தான் நான் கருதுகின்றேன். 

இந்த நல்லதொரு விடையத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து இந்த புதிய மாற்றத்தினை உருவாக்க முன்வர வேண்டும் அதுவே எமது இலக்காகவும் அமைந்திருக்கின்றது என தெரிவித்திருந்தார்.

Aaro 360 நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தேவநாயகம் நிறோசன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்களான மு.துதீஸ்வரன், செல்லப்பெருமாள் வணிதா, எஸ்.பி.எம் நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.