கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் சிறிய நீர்ப்பாசன குளங்கள் சிரமதானம்!!








கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு "அழகான நாடு - எழுச்சியுரும் தேசம்" எனும் தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக  பிரதேசத்தில் காணப்படும் சிறிய நீர்ப்பாசன குளங்களை சிரமதானம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் கைவிடப்பட்ட வயற்காணிகளை பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தல், உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் சமய நிகழ்வுகள் என்பனவும் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒக்டோபர் 3 ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை இந்நிகழ்வு இடம் பெறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை கமநல சேவைகள் பிரிவினுள் அடங்கும் நெடியமடுவில் உள்ள களிக்குளத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜெகன்நாத்தின் மேற்பார்வையின் கீழ் கமநல உத்தியோகத்தர் ரஷீட் இன் நெறிப்படுத்துதலின் கீழ் இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் கமநல அபிவிருத்தி  உத்யோகத்தர்கள், பிரதேச சபை அரசியல் பிரமுகர்கள், உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கமநல அபிவிருத்தி திணைக்களம் கமக்காரர்களுக்கு தேவையான நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சேவைகள்  மற்றும் உள்ளீடுகள் விநியோகம் மற்றும் சட்ட  ஆலோசனைகளை வழங்கி கமக்காரர் உரிமைகளை பாதுகத்தல் போன்ற சேவைகளை வழங்குவதுடன் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெற்றுக் கொள்வதற்கு அயராது முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.