பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை .

 


பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்; வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருந்தகங்கள்,வர்த்தக நிலையங்கள்,உணவு விற்பனை நிலையங்கள்,ஹோட்டல்கள் தொடர்ச்சியான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் இன்றைய தினமும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவு விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்போது கலாவதியான பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளை மீறிய வகையில் செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் தொடக்கம் கல்லாறு வரையான பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் சோதனையிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது கலாவதியான,உற்பத்தி திகதி கொண்ட பட்டியல் இல்லாத,பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் சிலருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய் தெரிவித்தார்.

இதேநேரம் தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள காரணத்தினால் பொதுமக்களை நுளம்பு பெருகாவண்ணம் தமது சுற்றாடல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.