பண்டாரவளை -அட்டாம்பிடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலிகாதென்ன பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக அங்குள்ள சில வீடுகளுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைக்க முயல்வதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலிகாதென்னயில் உள்ள மூன்று வீடுகள் கடந்த மூன்று நாட்களில் நான்குமுறை தீப்பற்றியுள்ளன. அங்குள்ள வீடொன்றுக்கு மாத்திரம் இருமுறை தீவைக்க சிலர் முயற்சித்துள்ளனர். இதன்படி நேற்று முன்தினம் (08) அதிகாலை 2 மணியளவில் வீட்டின் பின்பகுதி தீவைக்கப்பட்டுள்ளது. எனினும் அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணியளவிலும் வீட்டின் கூரை தீப்பற்றி எரிந்துள்ளது. இதேவேளை இச்சம்பவத்தால் எவருக்கும் பாதிப்பில்லை. ஆனால், குழந்தைகளின் ஆடைகள், பால் போத்தல்கள் உள்ளிட்டப் பொருள் எரிந்து நாசமாகியுள்ளதாக பாதிக்கப்பட்டக் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.