வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள இருநூறுவில் கிராமிய பாலம் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான நிலையில் சிதைவடைந்து காணப்பட்ட மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை செல்லும் பிரதான பாதையில் அமைந்திருந்த இருநூறுவில் பாலத்தினை புனரமைக்க வேண்டுமென அப்பகுதி பிரதேச வாசிகள் கிராமிய மற்றும் பிரதேசமட்ட குழுக்களினூடாக விடுத்த வேண்டுகோளுக்கமைய சுமார் 15.3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாலமே இராஜாங்க அமைச்சரினால் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இருநூறுவில் கிராமியப் பாலமானது மிக மோசமாக நிலையில் சிதைவடைந்து காணப்பட்டமையினால் உற்பத்தியாளர்களும், விவசாயிகழும் அறுவடைக்காலங்களில் தமது உற்பத்திகளை எடுத்துச்சென்று உரிய முறையில் சந்தைப்படுத்த முடியாத துர்பாக்கிய நிலையும், பாடசாலை மாணவர்கள் உட்பட பிற தேவைகள் கருதி குறித்த பாலத்தினை பயன்படுத்துவோரும் பாரிய சிரமத்தை எதிர்நோக்க வேண்டிய சூழலும் தோற்றம் பெற்றிருந்தது. தற்போது அந் நிலைமை முழுமையாக மாறியுள்ளமை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாலத்தினை திறந்துவைத்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதன் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பரதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன், தொழிநுட்ப உத்தியோகத்தர் நந்தகோபன் உட்பட இப்பால வேலைகளை திறம்பட முடித்துத் கொடுத்துள்ள சது கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் சுரேஷ்குமார், சது கன்ஸ்ட்ரக்ஷன் மேற்பார்வையாளரான கோடீஸ்வரன், இருநூறுவில் பிரதேச விவசாய அமைப்பின் தலைவர் சித்தானந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வவுணதீவு பிரதேச அமைப்பாளர் நித்தீஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டுள்ளனர்.