அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் என்பன இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.


 

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வெவ ஸ்ரீதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என்றும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யமாறும் வலியுறுத்தி கொழும்பு நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் என்பன இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.

அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வௌ ஸ்ரீதம்ம தேரர், டெங்கு தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு முன்பாக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையின் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பதாதைகளை ஏந்தியாவறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வசந்த முதலிகே, கல்வௌ ஸ்ரீதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை நியாயமற்றதும் காரணங்களற்றதுமான நடவடிக்கையாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.