மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் இருவேறு சம்பவங்களில் 69 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 06 மோட்டார் சைக்கில்களையும் இதில் தொடர்பு பட்ட சந்தேக நபர்கள் அறுவரையும் தாம் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை கரடியனாறு பிரதேசத்திலிருந்து வவுனதீவு பகுதிக்கு கொள்கலன்களில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்த கசிப்பினை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போது விசேட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலுக்கமைவாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமியின் திட்டமிடலில் உதவி பொலிஸ் பரிசோதகர் சமரசிங்கவின் தலைமையிலான பொலிஸ் குழவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கரடியனாறு பகுதியிலிருந்து வவுணதீவுக்கு எடுத்துச் சென்ற 33 ஆயிரம் மில்லி லிட்டர் கசிப்புடன் மூவரும், காஞ்சிரங்குடா பகுதியிலிருந்து வவுணதீவுக்கு எடுத்துச் சென்ற 36 ஆயிரம் மில்லி லிட்டர் கசிப்புடன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ் இரு சம்பவங்களில் 06 மோட்டார் சைக்கில்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களையும் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





