இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

 

நாட்டில் ஒரு வேளை உணவின்றி 6 இலட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக உலக உணவு ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், 37 இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் தேவையா என நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் கிண்ணியா நகர சபை உறுப்பினர்
எம்.எம்.நசுருதீன் கேள்வியெழுப்பினார்

கிண்ணியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், நாட்டு மக்கள் மீது அக்கரை செலுத்தாத பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாதளவுக்கு இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் வேதனையளிக்கிறது .

“அன்றாட வாழ்வாதாரத்துக்குத் தடுமாறும் அப்பாவி மக்களின் நிலையை கருத்திற்கொள்ளாது, அரசாங்கம் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி கட்சிகளை கட்டியெழுப்பக் காட்டும் கரிசனை நாட்டின் மீதும் மக்கள் மீதும் காட்டவில்லை.

“யுத்தத்தின் பின் மகிழ்ச்சியான வாழ்வு வாழக் கனவு கண்ட மக்களின் நிலை தற்போது சின்னா பின்னமாகியுள்ளது. இந்நிலை தொடருமானால் மக்களின் நிலைமை மேலும் மோசமடையும். இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. மக்கள் நலனில் அக்கரை செலுத்த முன்வாருங்கள்” என்றார்.