கிளீன் ஸ்ரீலங்கா அத்தம வேலைத்திட்டத்தில் களமிறங்கிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்- கூலாவடியில் சிரமதானப் பணி!


 























































நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு கூலாவடி பிரதான வீதியைத் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரெத்தினம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

2026.10.31காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், 23ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, மட்டக்களப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிராம மட்டத்தில் காணப்படும் பொதுவான தேவைகளை அடையாளம் கண்டு, சமூக ஒத்துழைப்பு மற்றும் கூட்டுத் தன்னார்வ உழைப்பின் ஊடாக தூய்மையான, அழகான சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இலங்கையின் பாரம்பரிய கிராமிய வாழ்வியலில் ஆழமாக வேரூன்றியுள்ள “அத்தம” என்பது, பணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் தமது உழைப்பைப் பரிமாறிக்கொண்டு, சமூக நலப் பணிகளில் ஒன்றிணைந்து செயற்படும் உன்னதமான கூட்டுழைப்புப் பாரம்பரியமாகும்.

ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதற்காகப் பலர் ஒன்றிணைந்து தங்களது உழைப்பை வழங்குவதும், மற்றொரு சந்தர்ப்பத்தில் அந்த உதவியைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதுமான இப்பாரம்பரியம், சமூக ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வலுப்படுத்தும் தனித்துவமான சமூகக் கட்டமைப்பாக விளங்குகின்றது.

அத்தகைய பாரம்பரியக் கூட்டுழைப்பையும் சமூகப் பொறுப்புணர்வையும் மீண்டும் மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் நோக்கிலேயே “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்சிரமதானப் பணியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவத்தினர், விமானப்படையினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் இணைந்து கூலாவடி பிரதான வீதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரெத்தினம் அலுவலகப் பணிப்புரைகளுடன் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாது, நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது களப்பணியில் அவர் ஈடுபட்டமை, அதிகாரிகளின் தலைமைத்துவம் என்பது வழிகாட்டுதலுடன் நின்றுவிடாமல் செயலில் வெளிப்பட வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அமைந்தது.

அரசாங்கத்தின் தூய்மையான சுற்றுச்சூழல் தொடர்பான கொள்கைத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன், அவற்றை நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதில் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் பொதுமக்களின் பங்களிப்பும் இன்றியமையாதவை என்பதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

“தூய்மையான நாடு – பொறுப்புள்ள குடிமக்கள்” என்ற நோக்கை முன்னிறுத்தும் இத்திட்டம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அரச நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனினதும் சமூகக் கடமை என்பதையும் வலியுறுத்துகின்றது.

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் இத்தேசியப் பணியானது, பாரம்பரிய சமூக ஒற்றுமையையும் நவீன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.