- புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்; ஆய்வக உபகரணங்கள் மீளமைப்பு ஆய்வகம் திறப்பு
தேசிய விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் ஏற்பாடு செய்த விசேட தொழில்நுட்ப ஊக்குவிப்பு நிகழ்ச்சியொன்று, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் இன்று (20) அந்த நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, நவீன தொழில்நுட்ப உபகரணங்களை அறிமுகப்படுத்துதல், அவை தொடர்பான நடைமுறைப் பயிற்சி அமர்வுகள், தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்குத் தயாராக உள்ள உற்பத்தி மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பப் படைப்புகளை உள்ளடக்கிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட இளம் பட்டதாரி ஆராய்ச்சி உதவியாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், ஆரம்ப மாதிரி நிலையைக் கடந்து வணிகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்குத் தயாராக உள்ள உற்பத்தி மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பப் படைப்புகள் இக்கண்காட்சியில் விசேடமாக இடம்பெற்றன.
அத்துடன், ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட, கண்டி மாவட்டத்தின் எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள் தொடர்பான வரைபடத் தகவல்கள் மற்றும் கைப்பேசி செயலி ஆகியன நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் இதன்போது கையளிக்கப்பட்டன.
மேலும், இந்நிறுவனத்தின் நிபுணத்துவ உதவியுடன் பழுதுபார்க்கப்பட்ட ஆய்வக உபகரணத் தொகுதிகள், வடமேல் பல்கலைக்கழகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இதனுடன், இப்பணிக்காகவே நிறுவப்பட்ட உயர்தொழில்நுட்ப வன்பொருள் மீளமைப்பு ஆய்வகமும் (High Tech Hardware Recovery Lab) அமைச்சர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
ஆராய்ச்சி நிறுவனங்களில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சிக்கலான மின்சார, இலத்திரனியல் மற்றும் கணினி உபகரணங்களின் உயர்தர வன்பொருள் பாகங்களை மீளமைக்கும் பணிகள் எதிர்காலத்தில் இந்த ஆய்வகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
காளான் பயிர்ச்செய்கைத் தொழில்துறையின் மேம்பாட்டிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட துல்லியமான சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு முறைமையைக் (Precision Environmental Control System) கொண்ட ஸ்மார்ட் காளான் வளர்ப்பு இல்லத்தின் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு முறைமையும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது.
விதாதா நிலையங்களின் 50 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும், 25 காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன.
இதன்போது உரையாற்றிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், தேசியப் பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வுகளை விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்காக நாட்டின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அத்தகைய ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் பணியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தற்போது முன்னிலை வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் ஒன்றிணைந்து தமது பங்களிப்பையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை மேம்படுத்துவதுடன், உயர்தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி, ஊக்குவிப்பு ஆகியவற்றிலும் அமைச்சு சம அளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி ரோஷனி திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன, பதில் பணிப்பாளர் நாயகம் கவீந்திர ஜயவர்தன, முன்னாள் பணிப்பாளர் நாயகம் குமாரி மீகஹகொட்டுவ உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வடமேல் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








