மனித ஆயுட்காலத்தை அதிகரிக்க ரஷ்யா புதிய முயற்சி

 




ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மகள் எனக் கூறப்படும், நாளமில்லாச் சுரப்பி மருத்துவத்தில் (Endocrinology) நிபுணத்துவம் பெற்ற பெண் மருத்துவர் ஒருவர், வயதாவதைக் கட்டுப்படுத்தி மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 26 பில்லியன் டொலர் பெறுமதியான அரசாங்க நிதியுதவித் திட்டத்தின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டம், ரஷ்ய மக்களின் சராசரி ஆயுட்காலத்தை 85 முதல் 90 ஆண்டுகள் வரை அதிகரிப்பதை முதலாவது கட்ட இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்காக மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து, நோய்களை முன்கூட்டியே தடுக்கும் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
இரண்டாவது கட்டத்தில், மரபணு சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து, இயற்கையான மனித ஆயுட்கால எல்லையைத் தாண்டி வாழ்நாளை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்களின் வயதாவதைத் தாமதப்படுத்தி, நீண்ட ஆயுளை வழங்கும் மருத்துவத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.