சந்தேக நபர்களைச் சந்தேக நபர்களாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைத் துன்புறுத்தியோ சித்திரவதை செய்தோ வாக்குமூலங்களைப் பெற முயற்சிக்கக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட Zoom கலந்துரையாடலின்போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட குறைபாடுகளின் பின்னணியில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் ஒருவர் குற்றவாளி என முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது என வலியுறுத்திய பொலிஸ் மா அதிபர், சந்தேக நபர்களின் உரிமைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் முழுமையான புரிதலைக் கொண்டிருப்பதுடன், சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே தமது கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அரசாங்கமோ, அமைச்சோ அல்லது தானோ பொலிஸாருக்கு கைது நடவடிக்கைகள் அல்லது வழக்குத் தாக்கல் தொடர்பில் எவ்வித இலக்குகளையும் நிர்ணயிக்கவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சந்தேக நபர்களைத் தாக்கியோ சித்திரவதை செய்தோ வாக்குமூலங்களைப் பெறுவது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இவ்வாறான முறையில் பெறப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தொடர்பான உரிய பதிவுகளைப் பராமரிக்கத் தவறுதல், அவர்களுக்குச் சிகிச்சை வழங்க வேண்டிய நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான விளக்கக்காட்சியும் இக்கலந்துரையாடலின்போது சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





