டிட்வா புயலின்போது கலா ஓயா பகுதியில் பேருந்தில் சிக்கியிருந்த 69 பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்ட மூன்று இலங்கை கடற்படை வீரர்களுக்கு, பொதுநல உயிர்காப்புச் சேவைக்கான காமன்வெல்த் பதக்கங்களும் இலங்கை உயிர்காப்பு வீரர் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயலின்போது நிலவிய கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக, கலா ஓயா பகுதியில் பயணிகள் பேருந்தொன்று நடுவழியில் சிக்கிக்கொண்டது. இதனால் பேருந்தில் பயணித்த 69 பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டது.
இதன்போது துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் மீட்புப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையின் மூன்று வீரர்கள், பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டதுடன், மனிதாபிமானம் மிக்க உயிர்காக்கும் சேவையையும் ஆற்றியிருந்தனர்.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட Fleet Chief Petty Officer SAEL சேனவிரத்ன, Leading Seaman BKA பிரசாத் மற்றும் Able Seaman STD அபேரத்ன ஆகிய மூன்று கடற்படை வீரர்களுக்கே இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் மூவரும் இலங்கை கடற்படையின் விரைவு நடவடிக்கைப் படகுப் பிரிவில் (Rapid Action Boat Squadron – RABS) பணியாற்றி வருகின்றனர்.
குறித்த வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற விசேட நிகழ்வில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இலங்கை கடற்படை வீரர்களின் உயிர்காக்கும் சேவையைப் பாராட்டும் வகையில் Royal Life Saving Society Commonwealth மற்றும் இலங்கை உயிர்காப்புச் சங்கம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வொர்த் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு வீரர்களுக்கான விருதுகளை வழங்கி வைத்தனர்.
மேலும், இலங்கை கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன, நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன, இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் தலைவர் அதுல சேனாரத்ன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நானயக்கார உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அனர்த்தங்களின் மத்தியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது 69 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்த மூன்று கடற்படை வீரர்களின் துணிச்சலும் மனிதநேயமும் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் மகத்தான சேவையாகும்.





