இன்று ஈழத்து முக்கிய முன்னோடி நவீன தமிழ் நாடக ஆளுமை சுஹேர் ஹமீது அவர்களது 45 ஆவது நினைவு தினம்.


கா. பாலேந்திரா,
அவைக்காற்றுக் கலைக்கழகம்.



அவர் 01-11-1981 அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 36 தான் இருக்கலாம். மிகச் சிறிய வயது. அவர் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன்.

இந்தச் சிறிய வயதுக்குள் அவர் சாதித்தது ஏராளம். ஈழத்துத்  தமிழ் நாடக உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு இது. ஈழத்துத்  தமிழ் நாடக வரலாற்றில் மிகவும் முக்கியமாகச்  சொல்லப்பட வேண்டிய ஒருவர். ஆனால் நிலைமை வேறு விதமாக உள்ளது. அவரைப் பற்றி நாடக வரலாற்றில்  பெரிதாகக் குறிப்பிடப்படுவதில்லை.  அது தான் மேலும் கவலை தரும் விஷயம். அவர் கருப்பொருள்களை விட உத்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தவராக அவரைப் பற்றி ஒரு விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தவறு. 

நான் அவரை 1973 இல் சந்தித்தேன். அந்த வருடம் தான் எனது நாடகப் பயணத்தில் முக்கிய நாடகமான "ஏணிப் படிகள்"  நாடகத்தை சுஹேர் ஹமீது அவர்கள் நெறிப்படுத்தி என் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தினார். மொறட்டுவை பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அந்த நாடகத்தை நான் தயாரித்தேன். அப்போது எனக்கு 21 வயது. 

எனது நீண்ட கால நாடக அனுபவங்களை இப்போது "எங்கள் முற்றம்"  சஞ்சிகையில் எழுதி வருகிறேன். ஏப்ரல் 2026 இதழில் "ஏணிப் படிகள்" பற்றிய கட்டுரையில் சுஹேர் ஹமீது பற்றி சில தகவல்களை  மட்டும் எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரையில் 

“சுஹேர் ஹமீத் அவர்கள் இலங்கையின் தலைநகர்  கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். மருதானையில் உள்ள சஹீராக்   கல்லூரியில் கல்வி பயின்றவர். 
நல்ல ஆங்கிலப் புலமை உடையவர். மருதானையில் ஒரு வர்த்தக நிலையத்தை நடத்தி வந்தவர். வசதியான குடும்பப் பின்னணி உள்ளவர்.
அக்குவைனஸ் நிறுவனத்தில் அரங்கு பற்றிப்  பயின்றவர்.
நான் 1970இல் கொழும்பு செல்வதற்கு முன்னரே  60களில் இருந்து பல சிறந்த நாடகங்களைக்  கொழும்பில் மேடையிட்டவர். 60களின் பிற்பகுதியில் அவர் மேடையேற்றிய “பொம்மலாட்டம்” என்ற நாடகம் தமிழ் நாடகத்தையே 20 வருடங்கள் முன்னே எடுத்துச் சென்று விட்டது என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.  
 
பெப்ரவரி 1973இல் அவரை கௌரவிக்கும் முகமாக டொமினிக் ஜீவா அவர்களது “மல்லிகை” சஞ்சிகை, அவரது ஒளிப்படத்தை அட்டையில் பிரசுரித்தது. இவரைப்  பற்றித்  தனியாக பதிவிட வேண்டும். இவ்வளவு ஆளுமை மிக்க சுஹேர் ஹமீது அவர்கள் பற்றி இலங்கை நாடக வரலாற்றில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. “

என்று குறிப்பிட்டுள்ளேன்.

இது பற்றி கடந்த 08/07/2026 "எங்கட புத்தகங்கள்" இல்லத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த நாடகக் கலந்துரையாடலில் அவரது "பொம்மலாட்டம்" நாடகம் பற்றியும், அடிமட்ட மக்களின் வாழ்க்கையைச் சொல்லுகின்ற  " நகரத்துக் கோமாளிகள்" ( Lower Depths by Maxim Gorky) நாடகத்தைப் பற்றியும் விபரமாகக் குறிப்பிட்டிருந்தேன். 

1973 இல் சுஹேர் பற்றிய பதிவை நாடகர் ரகுநாதன் அவர்கள் எழுதியிருந்தார்.

அவரது இறப்புப்  பற்றிய பதிவும்  "மல்லிகை"  நவம்பர் 1981 இதழில் பதிவாகியுள்ளது. 
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா இவ்வாறு எழுதியுள்ளார்...
 
"நண்பர் சுஹைர் ஹமீட் அவர்களை மல்லிகையின் அட்டையில் 73 பெப்ரவரியில் பதித்து அவரது தகைமையைக் கனம் பண்ணிக் கௌரவித்திருந்தோம்." 
அதில் நாடகர் ரகுநாதன் அவர்கள் சுஹேர் ஹமீது பற்றி 1973இல் எழுதிய விபரங்களையும் இணைத்திருந்தார். 

“ஆட்களை அளந்து பேசும் ஆற்றல்.  கலை பற்றிய முழு ஈடு பாடு.  வெற்றியல்ல, நிதானம். கம்பீரமான தோற்றம். பண்பும் வசதியும் மிக்க
 குடும்பத்தில் பிறந்து  நல்ல சூழ்நிலையில் வளர்ந்த முதிர்ச்சி. கலைக்குத் தன்னை அர்ப்பணித்தவர்.  கலையை முறையாகப் பயின்றவர்.

பரீட்சார்த்தமாகப் பலவற்றைச் செய்து பார்த்து வெற்றியும் கண்டவர்.  

சாதனைகள் பல செய்தவர். செய்ய இருப்பவர்.

ஆகவே என்றாவது மீண்டும் தொடரப்பட வேண்டிய விஷயம்”

திரு. சி.ஏ. .ரகுநாதன் இவரை அறிமுகப்படுத்தி எழுதியிருந்த வார்த்தைகளே இவை.

அந்த மனதுக்கினிய கலைஞனின் பிரிவையொட்டி மல்லிகையும் ஆழ்ந்த வருத்தமடைகின்றது என்று  ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது குறிப்பை நிறைவு செய்திருந்தார். 

அந்த இதழில் நாடகர் அந்தனி ஜீவாவும் சுஹேர் அவர்களின் இழப்புப் பற்றி ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.

இந்த இடத்தில் நான்  ஏற்கனவே குறிப்பிட்டுள்ள  “பொம்மலாட்டம்” என்ற நாடகம் பற்றிச்  சில தகவல்களைச்  சொல்லலாம் என்று நினைக்கிறேன். இது சுஹேர் அவர்களது நாடகக் கருப்பொருள் பற்றிய ஒரு உதாரணமாகப்  பார்க்கலாம்.

நாம் இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் வாழ்கிறோம். மனிதருடன் பேசுவதை விட கணணியுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான ஒரு நாடகத்தின் (The adding machine by Elmer Rice - 1923)தழுவல் தான் அது. அப்போது இந்த நூற்றாண்டில் நடக்கப் போவதைத்  தீர்க்க தரிசனமாகச்  சொன்ன நாடகம் என்று சொல்லலாம். 

இந்த நாடகத்தை அறுபதுகளில் தமிழில் செய்வது என்பது காலத்துக்கு முந்தைய செயல். அதனை மிக இளவயதில் சுஹேர் ஹமீது செய்திருக்கிறார். இந்த நாடகம் ஒரு வகையில் சார்லி சாப்ளின் 1936 இல் தயாரித்த உலகப் புகழ்பெற்ற திரைப்படமான (Morden Times) க்கு ஊக்கியாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.  இந்தத்  திரைப்படம் தொழிற்சாலை உற்பத்தி வரிசைகளின் இடைவிடாத வேகம், அறிவியல் மேலாண்மையின் எழுச்சி, மற்றும் பெரும் பொருளாதார மந்தநிலையின் போது தொழில்நுட்பம் குறித்துப்  பேசும்.

“பொம்மலாட்டம் “நாடகத்தில் திரு பூச்சியம் (Mr.Zero)தான் முக்கிய பாத்திரம்.  அவர்  எமது பாஷையில் ஒரு கணக்குப் பிள்ளை என்று கூறலாம்.  ஒரு கம்பெனியில் இலக்கங்களைக் கூட்டுதல்தான் அவருடைய வேலை. நாள் முழுக்கக்  கூட்டுவார். பல வருடங்களாக மிகவும் விசுவாசமாக அந்த வேலையில் இருக்கிறார். ஒரு நாள் அவருடைய மேல் அதிகாரி கூட்டுவதற்கு ஒரு மெஷின் வந்து விட்டதாகவும் அவரை வேலையில் இருந்து நிறுத்துவதாகவும் சொல்கிறார். உடனே அவர் அந்த மேல் அதிகாரியைக்  கொலை செய்து விடுவார். 

அப்படி மிக சுவாரசியமாக அந்த நாடகம் நகரும். சுஹேர் அவர்கள் தயாரித்த "பொம்மலாட்டம்"  நாடகத்தில் மிஸ்டர் ஸீரோவாக பிரபல கலைஞர்  லடீஸ் வீரமணி அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

சுஹேர் ஹமீது அவர்கள் 36 வயதில் காலமாவதற்கு முன்னர் நெறிப்படுத்திய நாடகங்கள்...

"பொம்மலாட்டம் "
"நகரத்துக் கோமாளிகள்"
"அவளைக் கொன்றவள் நீ"
"சாதிகள் இல்லையடி பாப்பா"
"வேதாளம் சொன்ன கதை" (கவிஞர் அம்பியின் கவிதை நாடகம்)
"வாடகைக்கு அறை"
"ஏணிப் படிகள்"
"பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்"
"வலை"
எஸ்பொவின் "முறுவல்"
"பச்சைக் கிளியே பழம் கொண்டு வா"
"கொலைகாரன்"
"பாவிகள்"

சுஹேர் ஹமீது அவர்களது தமிழ் நாடகத்துறை பங்களிப்புப்  பற்றி விரிவாக எழுத விருக்கிறேன். அவருடைய நினைவுகளைப் பகிரக்கூடியவர்கள் பின்னூட்டதில் தயவு செய்து பகிருங்கள்.

அவரது நினைவுகளைப் போற்றுவோம்.