யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்புடன் தொடர்புடைய 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 



சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினம் (19)இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2ஆம் வருடம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட இந்த குழு மோதலின்போத, மாணவன் ஒருவன் பிளேட்டினால் , இரு மாணவர்களுக்கு வெட்டுக்காயங்களையும் ஏற்படுத்தியுள்ளான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் வெட்டு காயங்களுக்கு உள்ளானவர்கள் உள்ளிட்ட ஐந்து மாணவர்களே தற்போது , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் , வெட்டி காயமேற்படுத்திய மாணவன் ஒருவனையும் , குழுக்களாக வீதியில் மோதலில் ஈடுபட்டு , பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் , 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்கள் குழுக்களை சேர்ந்த 20 பேரையும் கைது செய்துள்ளனர்.
இவர்கள், யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்று (20) முற்படுத்தப்பட்டபோது குறித்த 21 மாணவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
அதேவேளை குழு மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.