இலங்கையில் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W. P. J. சேனாதீர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்படி, 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்பதுடன், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத எவருக்கும் வாகனங்களை வழங்கக் கூடாது எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி பொதுவீதிகளில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சிறுவர்களின் பாதுகாப்பையும், வீதிப் போக்குவரத்து ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தை மதிப்போம்! சிறுவர்களின் உயிரைப் பாதுகாப்போம்! விபத்தில்லா வீதிப் பயணத்தை உறுதிப்படுத்துவோம்!





