பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகள் காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு – விரிவுரையாளர் விளக்கமறியலில்

 



அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய விரிவுரையாளரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான விரிவுரையாளர் வெள்ளிக்கிழமை (02) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது மனுதாரர் மற்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த குறித்த நபர், ஆசிரிய பயிற்சி மாணவிகளின் பாடப் பரீட்சைகளுக்கான மதிப்பெண்களை வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, தாங்கள் சம்பவம் தொடர்பில் வெளியில் முறைப்பாடு செய்தால் தங்களது மதிப்பெண்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சில மாணவிகள் நீண்டகாலமாக முறைப்பாடு செய்யாமல் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினரால் சந்தேகநபரான விரிவுரையாளர் கடந்த வியாழக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் கீழும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.