அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம் : நமது வடமோடிக் கூத்து மரபின் முதுசொம்

மட்டக்களப்பில் இன்றுவரை கூத்தரங்க நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி வரும் குறிப்பிடத்தகுந்த அண்ணாவிமார்களுள் ஒருவராகச் சீலாமுனையைச் சேர்ந்த திரு சி.ஞானசேகரம் அவர்கள் விளங்கி வருகிறார். ஊரில் இவரை 'யோகன் அண்ணாவி' என்றே அழைக்கின்றார்கள்.

மட்டக்களப்புச் சீலாமுனையில் வாழ்ந்த சின்னையா அழகு தம்பதியின் முதலாவது மகனாக 1956.10.10 ஆந் திகதி பிறந்த இவர். மட்டக்களப்பு மாமாங்கம் ஆரம்பப் பாடசாலை, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம் என்பவற்றில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றுள்ளார். 

இவர் வாழ்ந்த சீலாமுனையிலும், அயல் ஊர்களிலும் கூத்தரங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமையாலும், இவருடைய தந்தையார் வடமோடிக் கூத்தரங்கில் பெயர் பெற்ற பெண் கூத்துக் கலைஞராகவும், கூத்துப் பயிற்சிக் காலங்களில் அண்ணாவிமார்களுடன் சென்று கூத்துகளைப் பயிற்றுவிக்கும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கலைஞராகவும் இயங்கியதால் தந்தையுடன் கூடவே இவரும் சிறுபராயத்தில் கூத்தரங்கக் களங்களுக்குப் பயணித்து வரக்கூடிய ஏதுநிலைகள் வாய்க்கப்பெற்றுள்ளன.

இவரிடம் காணப்பட்ட தோல் வாத்தியம் இசைக்கும் ஆற்றலைக் கண்டு அதனை வளர்த்தெடுக்க விரும்பிய இவரின் தந்தையின் ஊக்கப்படுத்தல்கள் காரணமாக, சிறு வயதிலேயே மத்தளம் வாசிக்கும் தேர்ச்சியை இவர் அடைந்துள்ளார். 

இவருடைய வகுப்புத் தோழர்கள், 'தரம் 5 படிக்கும் போதே ஞானசேகரம் நன்றாக மத்தளம் வாசித்தான்' என்று கூறும் கதைகள் இவருடைய சிறுபராயத்து ஆற்றலை உறுதிப்படுத்தி நிற்கின்றன.

சிறுபராயத்திலேயே மத்தளம் வாசித்தமை ..
________________
இவர் தனது பதின்ம வயதுக் காலத்தில் தன்னுடன் கல்வி கற்ற நண்பர்கள் ஆடிய கூத்திற்கு மத்தளம் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இந்த வாய்ப்பை இவருக்குக் கல்வி கற்பித்த மத்தியசிங்கம் எனும் ஆசிரியர் ஏற்படுத்திக் கொடுத்ததாக மகிழ்வுடன் கூறுகின்றார். 

அதாவது 'குருக்கேத்திரன் போர்' என்னும் வடமோடிக் கூத்து இரண்டு மணி நேரத்திற்குரியதாகச் சுருக்கப்பட்டு திரு.மத்தியசிங்கம் ஆசானின் ஏற்பாட்டில் மட்டுநகர் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி கற்ற மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு 1960 களில் (1965 இன் பின்) மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மைதானத்தின் நடுவில் வட்டக்களரி கட்டப்பட்டு அதில் அரங்கேற்றஞ் செய்யப்பட்டதாகவும் அதற்குத் தானே பதின்ம வயதில் மத்தளம் வாசித்ததாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறுகின்றார். 

பெண் கூத்துக் கலைஞனாக ...
_________________
மட்டக்களப்பு கூத்துப் பண்பாடுகளில் அண்ணாவி ஒருவருக்கான அடிப்படைத் தகுதிகளுள் ஒன்றாக அண்ணாவி என்பவர் பெண் பாத்திரங்களையேற்றுக் கூத்துகளை ஆடிப் பெயரெடுத்தவராக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. 

இந்த வகையில் திரு சி.ஞானசேகரம் அவர்கள் உள்ளூர்க் கூத்துகளில் பெண் பாத்திரங்களையேற்று ஆடிப் பெயரெடுத்த கலைஞராகத் திகழ்ந்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு சீலாமுனையில் அரங்கேறிய 'பத்மாவதி' என்னும் வடமோடிக் கூத்தில் 'பத்மாவதி'யாக இவர் ஆடியுள்ளார், அதையடுத்து சீலாமுனையில் பயிலப்பட்ட 'இராம நாடகத்தில்' 'சீதை'யாக ஆடியுள்ளார். 

1988 ஆம் ஆண்டு சின்ன உப்போடை என்னும் ஊரில் பழகி அரங்கேற்றப்பட்ட 'பிரமராட்சதன் யுத்தம்' என்னும் வடமோடிக் கூத்தில் 'பிராமணப் பெண்', 'வினோதவல்லி' என்னும் இரு பெண் பாத்திரங்களுக்கு ஆடியுள்ளார். 

1990 களில் சீலாமுனையில் பழகி அரங்கேற்றப்பட்ட 'தருமபுத்திரன்' வடமோடிக் கூத்தில் இவர் 'துரோபதை'யாக ஆடியுள்ளார். 

2002 ஆம் ஆண்டு சீலாமுனையில் ஆடப்பட்ட 'அருச்சுனன் பெற்ற பாசுபதம்' என்னும் வடமோடிக் கூத்தில் இவர் அண்ணாவியாராக இயங்கிய அதேவேளை, 'ஏலகன்னி'யாகவும் ஆடியிருந்தார்

 'அண்ணாவி' என்னும் சமூக அங்கீகாரம்...
________________
உள்ளுர்க் கூத்தரங்கில் அண்ணாவி என்னும் பட்டம் அண்ணாவிக்குரிய சிறப்புத் தேர்ச்சியினை பொது வெளியில் நிரூபிப்பவர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றது. 

இது ஒரு சமூக அங்கீகாரமாகவே இருந்து வருகின்றது. தொடர்ச்சியான அவதானங்கள், மதிப்பீடுகள் ஊடாகவே இந்த அங்கீகாரம் கூத்துப் பண்பாடுகள் வலுவாக உள்ள சமூகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த வகையில், சி.ஞானசேகரம் அவர்களும் அண்ணாவி எனும் அங்கீகாரத்தைத் தனது சிறப்புத் தேர்ச்சியினை நிரூபித்தமையின் ஊடாகவே எய்தப்பெற்றுள்ளார். 

1970 களிலிருந்து பெண் கூத்துகள் ஆடிப் பெயரெடுத்து வந்துள்ளமை, மத்தளம் வாசிப்பதில் அடைந்திருந்த சிறப்புத் தேர்ச்சி என்பனவற்றை முதன்மைத் தகைமைகளாகக் கொண்டு இவருக்கான அண்ணாவி அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

அதாவது 1990 ஆம் ஆண்டு சீலாமுனையில் 'தருமபுத்திரன்' என்னும் வடமோடிக் கூத்து மறைந்த அண்ணாவியார் கிருஸ்ணப்பிள்ளை அவர்களால் திரு.செ.சிவநாயகம் அவர்களின் துணையுடன் எழுதித் தொகுக்கப்பட்டு பயிலப்படுவதற்கான சட்டங்கொடுக்கப்பட்ட போது 'உதவி அண்ணாவி' என்னும் அங்கீகாரம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு சீலாமுனையில் பழகி அரங்கேற்றப்பட்ட 'அருச்சுனன் பெற்ற பாசுபதம்' வடமோடிக் கூத்தினூடாக இவர் அண்ணாவி என்னும் முழுமையான அங்கீகாரத்திற்குரியவராகினார்.

வடமோடிக் கூத்தின் ஒவ்வொரு அசைவுகளும், ஆட்டக்கோலங்களும் சுற்றியிருந்து கூத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்காகவே ஆக்கப்பட்டுள்ளன என்பதை ஆடிக்காட்டி நமக்குக் கற்பித்து வருகின்ற அண்ணாவியாராக நம்மோடு வாழ்கிறார்.

கூத்து மீளுருவாக்கத்தில்...
_______________
தமிழ்க் கூத்தரங்க வரலாற்றில் கூத்தினைப் பயின்று வரும் கலைஞர்களுடன் பங்குபற்றிக் கூத்தைச் சமகாலத்திற்குரிய உள்ளூர் ஆற்றுகைக் கலையாக மீளுருவாக்கம் செய்யும் நோக்குடன் இலங்கைக் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் நாடகமும் அரங்கியலுக்குமான பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களால் 2002 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டில் பங்களிப்பு வழங்கி அதனூடாக உள்ளூர்க் கூத்தரங்குகளைக் காலாவதியாகாது காலத்திற்குப் பொருந்தக்கூடியதாகத் தகவமைக்குங் காரியத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் குறிப்பிடத்தக்க பிரதானமான அண்ணாவியாராக திரு.சி.ஞானசேகரம் அவர்கள் சிறப்பாக அடையாளங் காணப்படுகின்றார்.

இந்தவகையில், மட்டக்களப்பு சீலாமுனையில் நடந்தேறிய 'தருமபுத்திரன்' வடமோடிக் கூத்தை 'சிம்மாசனப் போர்' (2003) என்னும் கூத்தாகவும், 'வாளவிமன்' வடமோடிக் கூத்தை 'அபிமன்யு இலக்கணன் வதம்' (2004) என்னும் கூத்தாகவும், 'இராம இராவண யுத்தம்' வடமோடிக் கூத்தை 'சீதை சூர்ப்பனகை வதை' (2005) ஆகவும், 'அல்லி நாடகத்தை' 'அல்லியின் எதிர்வாதம்' (2006) எனவும், 'குயலவன்' வடமோடிக் கூத்தை 'சீதையின் துயரம்' (2007) என்றும் மற்றும் 'சுபத்திரை கல்யாணம்'(2008) வடமோடிக் கூத்தையும் பங்குகொள் நிலையில் சமகாலத்தில் முக்கியத்துவம் பெறும் பெண்ணிலைவாதச் சிந்தனைகள், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான சிந்தனைகள், சூழலியல் சிந்தனைகள் என்பவற்றுடன் தொடர்புறுத்தி மீளுருவாக்கஞ் செய்த ஆய்வுச் செயற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுக் குறித்த கூத்துகளை மீளுருவாக்கிப் பயிற்றுவித்து அரங்கேற்றிய அண்ணாவியாராக இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

2002 தொடக்கம் இன்றுவரை இரண்டு தசாப்த காலமாக இத்தகைய கூத்து மீளுருவாக்க நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்றார். 

சீலாமுனைக் கலைக்கழகம், மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாம், கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறை மற்றும் நாடகத்துறை சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களின் கூத்தரங்க நடவடிக்கைகள் முதலானவற்றில் இவருடைய பங்களிப்புத் தீர்க்கமானதாகவும் குறிப்பிட்டுச் சொல்லும் விதத்திலும் காணப்படுகின்றன.

கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வில் பாரம்பரியமான கூத்துப்பனுவல்கள் வாசிக்கப்பட்டு அதில் உள்ள ஆதிக்க, ஒடுக்குமுறைத் தன்மைகள் உரையாடப்பட்டு மீண்டும் கூத்துப்பனுவல் காலத்திற்குத் தேவையான பொருத்தமான சிந்தனைகள், எண்ணக்கருக்களுடன் மீளுருவாக்கஞ் செய்யப்படும்போது பாடல்களைச் சந்தத்துடன் அர்த்தம் பொதிந்ததாக ஆற்றுகைக்குரிய வகையில் இலகுபடுத்திக் கொடுப்பதில் அண்ணாவியார் சி.ஞானசேகரத்தின் பங்களிப்பு மேலோங்கிக் காணப்படும். மத்தளத்தை வாசித்துப் புதிய பாடல்களைப் பாடிப்பார்த்து அதனைப் பொருத்தமானதாக ஆக்குவதில் மிகவும் அக்கறையுடன் இவர் ஈடுபடுவார்.

பல்கலையில் வருகைதரு கலைஞனாக...
_________________
இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றிலே உள்ளுர்க் கலை ஆளுமைகள் வருகைதரு கலைஞர்கள் என்னும் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் அதற்குரிய வேதனங்களைப் பெற்று உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தமது வித்துவங்களைப் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும், நுண்கலைத்துறையிலும் 2010 களிலிருந்து நடைமுறைக்கு வந்தமையால் குறித்த நிறுவனங்களில் கல்வி கற்ற நாடகத்துறை மாணவர்களுக்குக் கூத்தினைப் பயிற்றுவித்த வருகைதரு கலைஞர்களுள் ஒருவராக அண்ணாவியார் சி.ஞானசேகரம் அவர்கள் விளங்கியுள்ளார். இதனூடாக 'ஆடகசவுந்தரி', ‘சகுந்தலைக்கு இட்ட சாபம்’ என்னும் இரண்டு வடமோடிக் கூத்துகளை அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து அரங்கேற்றியுள்ளார்.

சிறுவர் கூத்தரங்கில்...
________________
கூத்து மீளுருவாக்க நடவடிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக சிறுவர்களுக்கான கூத்தரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இச்சிறுவர் கூத்தரங்கினை முன்னெடுப்பதற்குரிய மிகப்பொருத்தமான அண்ணாவிமார்களுள் ஒருவராக திரு.சி.ஞானசேகரம் அவர்கள் அடையாளங்காட்டி வருகின்றார். 

2012 ஆம் ஆண்டு, சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் அவர்களால் ஆக்கப்பட்ட 'மழைப்பழம்' என்னும் சிறுவர் கூத்தினை அதே ஆண்டு கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து அரங்கேற்றியிருந்தார். 

அதையடுத்து, இக்கூத்தினை 2015 செப்டெம்பரில் நுண்கலைத்துறை மாணவன் இ.கங்கைகோபாலன் என்பவரின் ஆய்வுச் செயற்பாட்டிற்காக யாழ்ப்பாணம் சுதுமலையில் சிறுவர்களுக்குப் பயிற்றுவித்து அரங்கேற்றினார். 

2016 ஜுன் மாதம் வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு கூத்தினைப் பயிற்றுவிக்கும் செயற்பாடு து.கௌரீஸ்வரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போது 'கலிங்கப்போர்' என்னும் வடமோடிக் கூத்தினை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து அரங்கேற்றியிருந்தார்.

இதேபோல், ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் அவர்களால் எழுதப்பட்ட 'வனராணி' என்னும் மற்றுமொரு சிறுவர் கூத்தினை திருகோணமலை மாவட்டத்தின் 'வெருகல் - கல்லடி' என்னும் ஊரிலுள்ள சிறுவர்களுக்கு நுண்கலைத்துறை மாணவன் வி.விக்னேஸ்வரன் அவர்களின் ஆய்வு நடவடிக்கைக்காக  2019 ஆகஸ்டில் பயிற்றுவித்து அரங்கேற்றியிருந்தார்.

2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நுண்கலைத்துறை மாணவி சி.சிஜானி அவர்களால் ஆய்வுச் செயற்பாடாக மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவர்களிடையே முன்னெடுக்கப்பட்ட கூத்தரங்க நடவடிக்கையில் செ.சிவநாயகம் அவர்களால் எழுதப்பட்ட 'அன்னப்பட்சி' என்னும் வடமோடிச் சிறுவர் கூத்தினை மாணவர்களுக்குப் பழக்கி அரங்கேற்றியிருந்தார். 

2024 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மகா நரசிங்க வயிரவ சுவாமி ஆலயத்தின் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு 'ஆளுமையான ஒளவையாள்' என்னும் சிறுவர் கூத்தைப் பயிற்றுவித்து அரங்கேற்றிய அதேவேளை, 2026 ஆம் ஆண்டு மட்டுநகர் கல்லடி சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் அன்புநெறிக் கலை மன்ற அங்கத்தவர்களுக்கும் இக்கூத்தைப் பயிற்றுவித்து அரங்கேற்றியுள்ளார்.

பத்ததிச் சடங்கின் வாத்தியக் கலைஞனாக...
_________________
அண்ணாவியார் சி.ஞானசேகரம் அவர்கள் வடமோடிக் கூத்தில் தேர்ச்சிமிக்க அண்ணாவியாராகத் தன்னை நிரூபித்து உள்ளுர்க் கூத்துகளைச் சமகால நோக்கில் மீளுருவாக்கஞ் செய்து முன்னெடுத்து வரும் கலைஞனாக அடையாளங் காணப்படும் அதேவேளை, அவர் மட்டக்களப்புப் பத்ததிச் சடங்கிற்கான பறை, உடுக்கு ஆகிய வாத்தியங்களை இசைக்கும் சிறப்புத் தேர்ச்சிமிக்க கலைஞனாகவும் இயங்கி வருகின்றார். இவருக்கு உரிமையுள்ள மட்டுநகர் எல்லை வீதியிலுள்ள நரசிங்க வயிரவ சுவாமி கோவிலில் நடைபெறும் பத்ததிச் சடங்கில் பறைமேளம், உடுக்கு என்பவற்றை வாசிக்கும் தலைமைக் கலைஞனாக இவர் விளங்கி வருகிறார்.

இத்தோடு,உள்ளுர்த் தொழில் முறைமைகளான வாவி மீன் பிடித்தல், கரைவலை வேலை முதலானவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ள அதேவேளை, மனிதர்களுக்குக் கால் பாதத்தில் ஏற்படும் 'சுளுக்கு' வலியைக் குணப்படுத்தும் மரபுவழியான உள்ளூர் மருத்துவ நுட்பங்கள் தெரிந்தவராகவும் பல்வேறு நபர்களுக்கு அத்தகைய நோயைக் குணப்படுத்திய நபராகவும் காணப்படுகின்றார்.

பல்துறை ஆளுமையாக இயங்கிவரும் அண்ணாவியார் திரு சி.ஞானசேகரம் அவர்களிடம் வடமோடிக் கூத்தை நுணுக்கமாகக் கற்ற ஓர் இளந்தலைமுறையினர் நம்மத்தியில் உருவாகியிருக்கிறார்கள். 

இவ்வாறு மட்டக்களப்பு வடமோடிக் கூத்துமரபின் இருப்பிலும், முற்போக்கான இயக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த கருமங்களைச் செய்துவரும் அண்ணாவியார் சின்னையா ஞானசேகரத்தை வாழ்த்துவோம்!, மாண்பு செய்வோம்!!

==========================================

து.கௌரீஸ்வரன்,
முதுநிலை விரிவுரையாளர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை,