கல்வியின் உண்மையான நோக்கம் சான்றிதழ்களை வழங்குவது மட்டுமல்ல; வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடிய ஆளுமைகளை உருவாக்குவதாகும்.

 

கலாவதி கலைமகள்



கல்வி என்பது மனிதர் ஆளுமை திறன் விருத்தியில் முக்கியபங்குவகிப்பது. கற்றல் என்பது மனிதரை ஆளுமை, திறன் உள்ளவர்களாக மாற்றுகின்றது. அத்துடன் ஒவ்வொரு பிள்ளையும் தனது எதிர்காலத்தில் சுயமாக வாழதலுக்கான வலுவை, ஆற்றலை உருவாக்கும் வகையில் அமைதல் வேண்டும்.

எம்மிடையே செயற்பாட்டிலுள்ள கற்றல் முறை என்பது பரீட்சையை மையப்படுத்தியது. அதில் கற்பனை, கண்டுபிடிப்பு, திறன் வளர்ச்சி என்பவை மட்டுமே மாணவர்களை அளவிடுவதில்லை. மாறாக குறிப்பிட்ட நேர எழுத்துப் பரீட்சை மட்டுமே அளவிடுகின்றது. கற்றலில் யாரோ கூறியதை கேட்டு ஒப்புவித்தல் முக்கியமாகவுள்ளது. அவை தன்வாழ்தலுக்கும் தன் சூழலுக்கும் பொருத்தமற்றவையாகவும் தொடர்பு அற்றவையாக இருப்பினும் அவற்றை மனனம் செய்து எழுதுவதை புள்ளியின் அடிப்படையில் கொண்டாடி மகிழ்கின்றோம். இதன் அடிப்படையில் பிள்ளைகளை புத்திசாலியாகவும் முட்டாளாகவும் தரம் பிரிக்கின்றோம்.

கற்றல் என்பது மனிதரின் ஆளுமை திறன் வளரச்சியில் சுய சார்புடையவர்களாக உருவாக்க வேண்டும். எம் சூழலை இயற்கையை பாதுகாக்கவும்; ஆக்கபூர்வமாக மாற்றவும் உதவிபுரிவதாக இருத்தல் வேண்டும். ஆனால் எம் கற்றல் முறை தன்சார்பற்ற மனிதராகவும் பிரச்சனையைக் கையாளத் தெரியாதவர்களாகவும் உருவாக்கின்றன. அத்துடன் வாழும் உலகை நமக்காக மட்டும் பயன்படுத்தும் மாற்றும் சுயநலமிக்க அறிவாகவும் செயற்படுகின்றது.

எம்மை விளங்காமல் சூழலைப் புரியாமல் எவருக்கோ சேவகம் செய்யும் அறிவுமுறை நம்மை வெறும் ஆக்கபூர்வமற்ற நுகர்வோர்களாக மட்டுமே மாற்றியுள்ளது. நம்மையும் நம் சூலையும் விளங்கிக் கொள்ள வைக்கும் கல்வி முறை, நம்மைக் கண்டுபிடிப்பாளர்களாகவும் கற்பனைத்திறன் உள்ளவர்களாகவும் மாற்றும் அறிவு முறை ஆகியவற்றைத் தேட வேண்டியவர்களாக உள்ளோம்.

எம் கற்றலில் தன்னை உணர்தல், புறச் சூழலை இனங்காணல், சூழல் பற்றிய அறிவு என்பன இடைவெளிகளாகும். இச்சூழலில் எமக்கான கல்வி முறையை உருவாக்கல் என்பது அவசியமானது. இருப்பினும் ஏற்கனவே எழுதப்பட்ட சிந்தனை முறைகள் பரப்புரைகளாக அறிவுப்பரப்பில் உள்ளன. அவற்றை கட்டவிழ்க்க வேண்டியவர்களாகவும் உள்ளோம்.

இவ்வகையில், எம் அறிவில் ஒன்றை அழித்து ஒன்றை உருவாக்கல் என்பது பொது விதியாக உள்ளது. அதில் இயற்கை அழித்து அபிவிருத்தி செய்தல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. காட்டை அழித்துக் கழனிகளாக்குதல் என்பது பரவலாக புழக்கத்திலுள்ளது. இதற்கு மாற்றாகக் காட்டை உருவாக்கவும் களனிகள் செய்யவும் நம் அறிவு முறை சொல்லித்தரவில்லை என்பது கண்கூடு. ஒன்றை அழிக்காமல் மற்றொன்றை ஆக்கல். என்னும் அறிவு நம்மால் கண்டடையப்படவேண்டிய தொன்றாகும்.