யானை அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த மக்கள் முறைப்பாடு – வனஜீவராசிகள் திணைக்களத்துடன் எம்.பிக்கள் முக்கிய பேச்சு!”

 

 

 





யானை அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி மக்கள் முறைப்பாடு – வனஜீவராசிகள் திணைக்களத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன்,வைத்தியர் இ.ஸ்ரீநாத் ஆகியோர் கலந்துரையாடல்!

திக்கோடை தும்பாலை, செல்வாபுரம் மற்றும் வேற்றுச்சேனை ஆகிய கிராமங்களுக்கு நேரில் விஜயம் செய்து மக்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமது பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை தொடர்பில் மக்கள் தமது கவலைகளைத் தெரிவித்தனர்.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலால் தமது அன்றாட வாழ்க்கை, விவசாய நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய மக்கள், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, குறித்த கிராமங்களில் நிலவும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.