செங்கலடி நகருக்குள் படையெடுக்கும் யானைகள்! காடுகள் அழிக்கப்பட்டதால் மக்களுக்கு ஆபத்து; பாதுகாப்பு வழங்குவது யார்?





kugan 



மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காட்டு யானைகள் நகருக்குள் நுழைந்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் கட்டிடங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு, செங்கலடி கறுத்தப்பாலத்தைத் தாண்டி நகருக்குள் காட்டு யானைகள் நுழையும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதுவரை கறுத்தப்பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தங்கியிருந்த யானைகள், அப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் குடியிருப்புகளை நோக்கி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், செங்கலடி சித்திவிநாயகர் ஆலயப் பகுதியில் உள்ள கட்டிடங்களையும் யானைகள் சேதப்படுத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யானைகள் தொடர்ச்சியாக நகருக்குள் நுழைந்து வருவதால், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

காடுகளை அழித்து காணிகளைக் கைப்பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது?

யானைகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, அரச காணிகளைக் கைப்பற்றும் நோக்கில் சிலர் JCB இயந்திரங்களைப் பயன்படுத்திக் காடுகளை அழித்து, காணிகளைத் துப்புரவு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு அழிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காணி ஆக்கிரமிப்புகளுக்கு சில தனியார் அமைப்புகள், அரச திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்டோர் துணைபோனார்களா என்ற கேள்விகளையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர். எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மூலம் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

மறுபுறம், யானைகள் நகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். யானைகள் நடமாடும் பகுதிகளில் மின்சார வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை மற்றும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மனித உயிர்கள் பலியாவதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்படுமா?

காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக யானைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா, அவை நகருக்குள் நுழைவதற்கான காரணங்கள் என்ன, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பன குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோருகின்றனர்.

காட்டு யானைகளிடமிருந்து மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கும், யானைகள் நகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட பொறுப்புடைய தரப்பினர் அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வரை அதிகாரிகள் காத்திருக்கப் போகிறார்களா? செங்கலடி நகருக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்கப் பொறுப்புடைய தரப்பினர் எப்போது உரிய நடவடிக்கை எடுக்கப் போகின்றனர்?

இதே வேளை செங்கலடி வட்டார உறுப்பினர் அ. நிதர்சன் இரவு பகல் பாராது அந்த பகுதிக்கு வரும் யானைகளை விரட்டுவதில் முழு மூச்சாக செயற்பட்டு வருவதோடு இரவில் வரும் யானைகளை யானை வெடிகளை வீசி யானைகளை விரட்டுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.