நமது நினைவுகளில் வாழும் மாமாங்கத்து ஐயா : இ. பூரணானந்தக் குருக்கள்



 


 

மட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தில் பிரதான குருக்களாகப் பல தசாப்தங்கள் பணிபுரிந்த அமரர் இரத்தினம் பூரணானந்தக் குருக்கள் ஐயாவின் ஒளிப்படத்தை அமிர்தகளிக் கழகத்தினர் தமது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்கள். 

நமது இளமைக் காலத்தில் நாம் பார்த்த, நம்மோடு பழகிய ஐயாவின் தோற்றத்தைக் காட்டும் படங்களாக அவை இருப்பதால் ஐயாவின் நினைவுகள் எமக்குள் வரத்தொடங்கி விட்டன.

இ.பூரணானந்தக் குருக்கள் மிகப்பெரும்பாலும் மட்டுநகரில் காலங்காலமாக வாழ்ந்த அத்தனை குடும்பங்களையும் நன்கு தெரிந்து வைத்தவராக வாழ்ந்தவர். 

கோவிலுக்கு வரும் ஒரு நபருடன் உரையாடுகின்ற போது அவர்களின் தாய் தந்தையரை அல்லது பேத்தி பேரன்களைக் கேட்டு ஒவ்வொருவரையும் பற்றி அறிந்து கொள்கின்ற நினைவுச் சுரங்கமாக வாழ்ந்தவர்.

பொறுமைக்கு இலக்கணமாகக் காட்சிதந்தவர். கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்ய விரும்பும் ஒவ்வொரு மனிதரும் கூறுகின்ற பெயர்களை ஆறஅமரக் கேட்டு அவற்றைத் தெளிவாக உச்சரித்து அர்ச்சனை செய்த ஐயாவாக இயங்கியவர்.

எம்மையும், எம்மைப் போன்ற சிறுவர்களையும் கண்டால் பூசை முடிந்ததும் அழைத்துக் கதைக்காமல் விடவே மாட்டார், நமது உறவினரை விசாரிப்பார், பின்னர் என்ன வகுப்பில் படிக்கிறீர்? கடந்த தவணையில் வகுப்பில் எத்தனையாவது ஆள்? கணிதத்தில் எத்தனை புள்ளி? தமிழில் எத்தனை புள்ளி? விஞ்ஞானத்தில் எத்தனை புள்ளி? என்று கேள்விகள் கேட்பார், மோதகமும் புற்கையும் தந்து மகிழ்விப்பார்.

நமது சிறுவர் பராயத்தில் நண்பர்களுடன் அடிக்கடி பூசை நேரத்தில் மாமாங்கரிடம் செல்வதில் நமக்கு ஆர்வம் அதிகம், காரணம் என்னவென்றால் பூசை நேரத்தில் கோவில் மண்டபத்தில் மரத்தூணில் தொங்கவிடப்பட்டிருந்த தவிலை அடிப்பதில் நமக்கிருந்த ஆசையும் ஈடுபாடுமேயாகும். நண்பர்களுடன் சேர்ந்து மாறி மாறி தவிலை வாசித்து மகிழ்ந்த அந்நாள்கள் என்றும் இனிமையானவை.

அக்காலத்தில் நாள்தோறும் மூன்று நேரப் பூசைகளின் போது தவில் வாத்தியம் இசைக்கப்படுவது வழமை வெள்ளிக்கிழமைகளில் வளர்ந்த ஆண்கள் அதனை வாசிப்பர். மிகப்பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் கன்னன்குடாவிலிருந்து கோவிலுக்கு வரும் மூத்த பக்தர் (கலைஞர்) ஒருவர் தவிலைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துவிடுவார். நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்க மாட்டாது,மற்றைய நாள்களில் நம்மைப் போன்ற இளையோர் இசைப்பர்.

சிறப்புப் பூசைகளிலும், ஆண்டுப் பெருவிழாவிலுமே தவில் நாதஸ்வரம் இசைக்கப்படும்.

பாடசாலை நாள்களில் கோவிலுக்குச் சென்றால் நம்மைக் கண்டதும் ஏன் பள்ளிக்குப் போகவில்லை? என்று கேட்காமல் விடவே மாட்டார். இதனால் பூரணானந்தக் குருக்கள் ஐயா எம்மைப் போன்றவர்களுக்குக் "கல்வி ஒன்றுதான் உங்களை உயர்த்தும் வழி" என்று அருள்வாக்குக் கூறிய மாமாங்கரின் அவதாரமாகவே வாழ்ந்தார்.

முக்கியமான தேர்வுகளுக்குச் செல்லும் முன் நாம் அவரிடம் சென்று ஆசி பெறுவதைப் பழக்கமாக வைத்திருந்தோம். புத்தாண்டு பிறப்பு நாள்களில் அவரிடம் ஆசிபெறச் சென்றால் சில சில்லறை நாணயங்களை நமது கைக்குள் வைத்தே ஆசி தருவார்.

ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் இருக்கக்கூடிய சில ஆதரவற்ற மனிதர்களுக்குப் பகல் பூசை நிறைவடைந்ததும் ஆலயத்தில் கிடைக்கக்கூடிய பிரசாதத்தைப் பகிர்ந்து உண்ணக் கொடுப்பதில் அவருக்கு ஆலாதியான ஆர்வம் இருந்ததை நாம் பார்த்திருக்கின்றோம். பிரசாதம் இல்லாவிட்டால் சமையலறையிலிருந்து சோறு கறியை எடுத்து வந்து வழங்குவதையும் பார்த்திருக்கிறோம்.

அக்காலத்தில் ஆண்டுப் பெருந்திருவிழாக் காலத்தில் இரண்டாவது திருவிழா ஐயாவின் உபயமாகவே இருந்தது. ஐயாவின் திருவிழா நாளில் தவில் நாதஸ்வர இசை தூக்கலாக இருக்கும், பெருஞ்செலவில்; திருவிழாவில் தவில் நாதஸ்வரக் கலைஞர்களை அழைத்து அவர்களது இசையைப் பக்தர்கள் இரசிக்கச் செய்தவர்.

ஐயாவின் காலம் உள்நாட்டுப் போர் அரும்பி வளர்ந்து உக்கிரமடைந்த சூழல்களையுடையதாகவே இருந்தது. போர்க்காலத்தில் உருவான பல்வேறு தாக்கங்களையும் எதிர்கொண்ட மட்டுநகரின் கவனத்திற்குரிய இடமாக மாமாங்கரின் கோவில் வெளி இருந்து வந்துள்ளது. 

வரலாற்றின் இத்தனை அனுபவங்களையும் அக்கோவிலின் பிரதம குருவாக எதிர்கொண்டு மாமாங்கரின் பேரருளோடு கோவிலினுடைய தனித்துவத்திற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு செயலாற்றிய மாண்பிற்குரிய கோவில் குருக்களாக அவர் வாழ்ந்துள்ளார்.

பூரணானந்த ஐயா, குருக்களுக்குரிய வீட்டில் தங்குவதிலும் பார்க்க அதிக நேரம் கோயிலிலேயே இருப்பார். 

1990 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் முறிவடைந்து மட்டுநகர் ஒரு சூனியப் பிரதேசமாக ஆகிய சூழலில் பெருந்திரளான மட்டுநகர மக்கள் மாமாங்கப் பேராலய வளாகத்தில் தஞ்சமடைந்திருந்தார்கள். 

அந்நாள்களில் பூரணானந்தக் குருக்கள் ஐயாவும் தனது குடும்பத்தினர் அனைவரும் யாழ்ப்பாணத்திலிருந்த நிலையில் தனி மனிதராக மாமாங்கக் கோவிலின் நாளாந்தப் பூசைகளைக் கவனித்து வந்தார். 

ஆலய வண்ணக்குமாரின் ஆதரவோடும், தனக்கு நன்கு நெருக்கமான அமிர்தகளி மக்களின் துணையோடும் ஆலய வளாகத்தில் தஞ்சமடைந்து பயத்துடனும், பீதியுடனும் வாழ்ந்த ஆயிரக் கணக்கான மக்களது மனங்களை ஆற்றுப்படுத்திய ஓர் ஆன்மீகக் குருவாக அப்போது அவர் காட்சி தந்தார்.

அந்நாள்களில் ஆலய மண்டபத்திற்குள் தஞ்சமடைந்திருந்த மக்களோடு அளவளாவித் திரிவார். 

இரவில் நாமும் நமது உறவினர் சிலரும் வானொலியில் 'வெரித்தாஸ்', இலண்டன் BBC சிற்றலைவரிசைகளல் செய்திகளைக் கேட்கும் போது நம்மருகில் வந்து தானும் அவற்றைச் செவிமடுத்துப் பின்னர் அது தொடர்பாகக் கதைத்திருந்து செல்வார். அந்நாள்களில் ஐயா மக்களோடு மக்களாகவே கோவில் மண்டபத்தில் படுத்துறங்கினார்.

1990 ஆம் ஆண்டு ஆடி அமாவாசைத் திருவிழா பயத்துடனும் பீதியுடனும் வாழ்ந்த மக்களின் பங்கேற்புடன் கொடியேற்றமின்றிய பூசையாக நடந்திருந்தது. தீர்த்த உற்சவத்தின் போது குளத்திலிறங்கிய ஐயா அழுது புலம்பி மாமாங்கரைப் பார்த்துப் பஞ்சதீபம் காட்டி எல்லோரையும் தெய்வத்தை நோக்கி ஓலமிட்டு அழுது வேண்டுதல் பெறச் செய்திருந்தார். இதனால் அந்நாள்களில் தற்காலிக மன ஆறுதல் பலருக்கும் கிடைத்திருந்தது. எதுவும் நிச்சயமற்ற அந்நாள்களில் வாழுவோம் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையினையும் தந்த கூட்டு வழிபாடாக அது விளங்கியிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறோம். ஐயா அன்று அறிந்தோ அறியாமலே தன்பணியைச் செய்திருந்தார் என்பதை உணர்ந்து கொள்கிறோம்.

மாமாங்கரின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை முதன் முதல் நட்டவர் பூரணானந்தக் குருக்கள்தான், 

மாமாங்கப் பேராலயத்தின் வரலாற்றில் சம்பளத்திற்குப் பணியாற்றிய குருக்களாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை கோவிலையும், கோவிலுக்கு உரிமையான சமூகங்களையும் மற்றும் மாமாங்கரைப் பெருந் தெய்வமாகக் கருதி வழிபாடு செய்யும் பல்வேறு அயலூர்ச் சமூகங்களையும், பொது மக்களையும், சைவ சமயஞ் சாராத பிற இன, மத மக்களையும் பற்றிய தெளிவானதும் ஆக்கபூர்வமானதுமான புரிதல்களுடன் இப்பேராலயத்தின் பிரதம குருக்களாக வாழ்ந்தவர், இயங்கியவர் பூரணானந்தக் குருக்கள் அவர்கள்.

ஐயா இயற்கையடைந்ததும் அவரது உடல் மாமாங்கப் பேராலயத்தின் உரித்தாளர்கள் வாழும் கிரமங்களின் ஊடாக ஊர்வலம் கொண்டுவரப்பட்டு மாமாங்கம் மயானத்தில் தீ வைக்கப்பட்டிருந்தது. ஐயாவின் பூதவுடல் தாங்கிய பாடையைச் சுமப்பதில் பல்வேறு இளைஞர்களும் போட்டி போட்டுக் கொண்டு நகர்ந்ததை நாம் பார்த்தோம். மட்டுநகரில் வாழ்ந்த பொது மக்கள் ஐயாவின் பூதவுடலை பூக்களாலும், மாலைகளாலும் மாண்பு செய்தார்கள். அப்போது நாம் ஐயாவின் முக்கியத்துவத்தையும் அவர் மட்டுநகர் மக்களின் மனதில் பிடித்திருந்த இடத்தையும் கண்டுகொண்டோம்.

இவ்வாறு கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மட்டுநகர் மாமாங்கப் பேராலயத்தின் வரலாற்றில் கவனத்திற்குரிய ஆளுமையாக அமரர் இ.பூரணானந்த குருக்கள் ஐயா விளங்கியுள்ளார்.

து.கௌரீஸ்வரன்,
30.10.2026.