கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி – குளத்துமடு கிராமத்தைச் சேர்ந்த முருகுப்பிள்ளை ருசாந்தன், இளங்கலை வணிக முகாமைத்துவப் பட்டத்தை (Bachelor of Business Management – BBM) பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
குளத்துமடு கிராமத்திலிருந்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற முதல் நபராகவும், தனது குடும்பப் பரம்பரையில் முதல் பட்டதாரியாகவும் உருவெடுத்துள்ள ருசாந்தனின் சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் கிராம மக்களுக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது ஆரம்பக் கல்வியைத் தரம் 1 முதல் தரம் 9 வரை வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் பயின்ற ருசாந்தன், அங்கு உயர்தர வகுப்புகள் இல்லாத காரணத்தினால், தொடர்ந்து கறுவாக்கேணி விக்னேஸ்வர கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.
கல்விப் பயணத்தில் எதிர்கொண்ட சவால்களைத் தாண்டி, கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் அவர் அடைந்துள்ள இந்த வெற்றி, வாகனேரி பிரதேசத்திற்கும் குளத்துமடு கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
குறிப்பாக, கிராமப்புற மாணவர்களும் உயர்கல்வியில் சாதனை படைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டும் இந்த வெற்றி, எதிர்காலச் சந்ததியினருக்குத் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
ஒரு கிராமத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள முருகுப்பிள்ளை ருசாந்தனுக்கு BATTI MEDIA தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.





