மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஆதரவு! – ஏர்முனை அமைப்பின் கூட்டத்தில் எம்.பி. சிறிநாத் உறுதி

 







நிரந்தரக் காணி, செயற்கை அவயவங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற முயற்சி

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல், ஏர்முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டம் நேற்று (14.10.2026) வந்தாறுமூலையில் அமைந்துள்ள வேர்ல்ட் விஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

அமைப்பின் நிர்வாகிகளின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன்போது, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, அமைப்பின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை, கட்டட உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார அபிவிருத்தி, செயற்கை அவயவங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவி உபகரணங்களின் தேவைப்பாடு, வளப் பற்றாக்குறை ஆகிய விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அமைப்பிற்கான நிரந்தரக் காணியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், செயற்கை அவயவங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் தன்னார்வ நிறுவனங்களை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஏனைய கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பான அறிக்கையைப் பாராளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதுடன், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான விடயங்களைப் பாராளுமன்ற அமர்வுகளின்போது முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவப் பண்புகளை ஊக்குவிப்பதன் மூலம் சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என வலியுறுத்திய அவர், ஒவ்வொருவரினதும் தனித்துவமான திறமைகளை மதித்து, அவர்களைச் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்வதற்குத் தாம் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த. பிரபாகரன், ஏர்முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.