சிறுவர்களும் முதியோர்களும் இணைந்த அன்பின் சங்கமம்- கல்லடி விபுலானந்தா முதியோர் இல்லத்தில் சிறுவர் தினம், முதியோர் தினம் இணைந்த கொண்டாட்டம்














































உலக சிறுவர் தினத்தையும் சர்வதேச முதியோர் தினத்தையும் இணைத்து, சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் இடையிலான அன்பு, பாசம் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில், SriLan Can Learn Kindergarten பாடசாலையினால் சிறப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 10.10.2026 அன்று காலை 9.30 மணியளவில் கல்லடி விபுலானந்தா முதியோர் இல்லத்தில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

SriLan Can Learn Kindergarten பாடசாலையின் அதிபர் திருமதி Yanarthany Mahilnamby தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது, சிறுவர்கள் முதியோர்களுக்கு மாலை அணிவித்து, நிகழ்வுக்கான அடையாளச் சின்னங்களைச் சூட்டியதுடன், அன்பளிப்புப் பொதிகளையும் தமது கைகளால் வழங்கி அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர். அதேவேளை, முதியோர்களும் சிறுவர்களுக்கு மாலை அணிவித்து, அடையாளச் சின்னங்களைச் சூட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இரு தலைமுறையினருக்கும் இடையிலான இந்த அன்புப் பரிமாற்றம் நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது.

மேலும், சிறுவர்களுக்காகப் பாடசாலையினால் வழங்கப்பட்ட பரிசில்களைப் பெற்றோர்கள் தமது கற்பனைத் திறனையும் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் வெற்றிக்கு பெற்றோர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, கேக் வெட்டி அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன், சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சிறுவர்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை வெளிப்பாடுகள் முதியோர்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தன.

“எமது நாட்டின் எதிர்காலச் சிறந்த தலைவர்கள் சிறுவர்கள்” என்ற உன்னதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுவர்கள் நோயற்ற வாழ்வுடனும் நுண்ணறிவுடனும் வளர்வதுடன், நன்னெறிகளையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து, சிறந்த கல்வியைப் பெற்று நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற செய்தி இந்நிகழ்வின் ஊடாக வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை, அனுபவங்களின் கருவூலமாக விளங்கும் முதியோர்களைப் போற்றிப் பாதுகாப்பதும், அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை அனுபவங்களிலிருந்து நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்வதும் இன்றைய தலைமுறையின் கடமையாகும் என்பதையும் இந்நிகழ்வு எடுத்துரைத்தது.

சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் இடையில் அன்பையும் மரியாதையையும் பரஸ்பரப் புரிதலையும் வளர்க்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயப் பண்புகளையும் இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் அர்த்தமுள்ள முயற்சியாக அமைந்தது.