மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிய மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு!

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் சேதமடைந்து, குன்றும் குழியுமாகக் காணப்பட்டதுடன், பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

மாவட்ட செயலகத்திற்கு தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த வீதிகளைத் திருத்தியமைக்கும் பணிகள் நேற்று முன் தினம் தினம் (14) மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வீதி புனரமைப்புப் பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார் மற்றும் ஏனைய வட்டாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மாவட்ட செயலகத்திற்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இலகுவாகப் பயணிப்பதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து அசௌகரியங்களைக் குறைப்பதற்கும் இவ்வேலைத்திட்டம் உதவியாக அமைந்துள்ளது.

பொதுமக்களின் நலனையும், அத்தியாவசியப் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளையும் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.