கோவா சர்வதேச உடற்கட்டழகுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றார் மட்டக்களப்பு வீரர் கி. ஜிஜானந்!

 



இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற ICN India – Goa Natural Bodybuilding Championship 2026 சர்வதேச இயற்கை உடற்கட்டழகுப் போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கி. ஜிஜானந் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக, இப்போட்டியின் Men’s Classic பிரிவில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கியுள்ள அவர், ICN India – Goa போட்டியின் குறித்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆறு போட்டிப் பிரிவுகளில் பங்கேற்ற கி. ஜிஜானந், Men’s Classic பிரிவில் தங்கப் பதக்கத்தையும், Men’s Bodybuilding பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

அத்துடன், மேலும் இரண்டு பிரிவுகளில் மூன்றாமிடத்தையும், ஏனைய இரு பிரிவுகளில் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களையும் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, ஆறு போட்டிப் பிரிவுகளிலும் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் உள்ளிட்ட நான்கு பதக்கங்களையும், ஏனைய இரு பிரிவுகளில் சிறந்த இடங்களையும் பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த வெற்றியின் பின்னணியில் நீண்டகாலக் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தியாகம் மற்றும் விடாமுயற்சி ஆகியவை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது பயணத்தில் உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மண்ணிலிருந்து சர்வதேசப் போட்டி அரங்கிற்குச் சென்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ள கி. ஜிஜானந், இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில் தனது சாதனைப் பயணத்தைப் பதிவு செய்துள்ளார்.