அருளின் கவிதைகள்! தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுள் சிலவற்றின் மீதான பார்வை -த.கி.ஷர்மிதன்

 




ஈழத்து இலக்கியப் பரப்பில் பாரறிந்த தமிழ் எழுத்தாளருள் ஒருவர் ஆரையூர் அருளர். தனது உரையாலும் எழுத்தாலும் தமிழ் வளர்த்துவரும் இவரது பணி போற்றத்தக்கது. அடக்கம், பணிவு, விட்டுக் கொடுப்பு, அர்ப்பணிப்பு, சேவை என்பன மிக்க வித்தகக் கலைஞர் இவரென்பது சாலப் பொருந்தும். கிழக்கிலங்கையில் மட்டக்களப்புத் தமிழகத்தில் நன்னகராம் ஆரையம்பதியில் வசித்துவரும் மூத்ததம்பி அருளம்பலம், 'ஆரையூர் அருள்' எனும் பெயரில் தனது எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கவிதை, கட்டுரை, செய்யுள், பாடல் எனப் பல்வகைமைகளில் சமூகம், சமயம், வாழ்வியல் எனப் பல பொருள்களிலும் ஆக்கங்களை ஆக்கி அளித்துவருகிறார். நவீன கவிதை, மரபுக்கவிதை, கரகம், கும்மி, பின்னல் கும்மி, நாட்டார் பாடல், கிராமியப் பாடல், வாழ்த்துப் பாக்கள், இறையின்பப் பாவாரங்கள், கூத்துப் பாடல்கள், கொம்புமுறிப் பாடல்கள், நவீன கூத்துப் பாடல்கள் என இவர் இதுவரை 10,758 பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன், தினக்குரல், தினக்கதிர், தினமணி, கதிர், தளிர், கதிரவன், விடிவானம், ஒளி, சிகரம், கீழ்வானம் எனப் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. அவை இவரது தமிழ் ஆளுமைக்குச் சான்று பகர்வனவாய்த் திகழ்கின்றன.

மாவட்ட முதன்மை வாழ்நாள் சாதனையாளர், தேசிய கலைஞர் எனத் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆரையூர் அருள் எழுதிய கவிதைப் படைப்புகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளில் வெளிப்படும் சிந்தனைகளை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

தாயவள் ஏங்கி நிற்கிறாள்:

தாய்நாட்டின் (இலங்கையின்) நிலைமையை எடுத்தியம்பும் கவிதையாக இது திகழ்கின்றது. நம்மை ஈன்ற, நம்மைத் தாங்கும் தாய் மண்ணை நமது சுய இலாபத்திற்காய் கவனியாது இருக்கும் நிலைமையை நன்கு எடுத்து விளக்கும் கவிதையாக இக்கவிதை காணப்படுகிறது. எளிமையான சொல்லாடல் மூலம் சொல்லவந்த உயர் பொருளை நன்கு எடுத்துரைக்கும் இவருடைய பாங்கு சிறப்புக்குரியதாகும். பெற்ற தாயையே விலைபேசி விற்கும் ஈனச் செயலைச் சாடிடும் கவிஞரின் ஆதங்கம் எம்மில் சாட்டையாக வந்து விழுகின்றது.

சுகபோகச் சாக்கடையில் வீழ்ந்து
தம்மினம் விற்க விலை பேசும் -சொந்த
மைந்தர்கள் மனநிலை யறியாத
மாதா ஏங்கி நிற்கிறாள்..

'ஒற்றுமைக் கரவொலி ஒலிக்கட்டும்' இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறும் கவிதை. இலங்கையில் பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கான காரணம், அதனைச் சரிசெய்யும் முறைமை, இன ஐக்கியத்தால் ஏற்படும் நன்மை என்பவற்றை கவிஞர் கவிதையூடாக வெளிப்படுத்துகிறார்.

இன ஐக்கியத்திற்குத் தடை 'சாதியம் தான் என்பதை,

பேசிடின் ஜாதிகள் பற்றி - மன
அந்தகாரம் தினம் முற்றி..

எனப் பாடுகின்றார்.

இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை,

சங்கிலி பிணைந்திட்டால் வலிமை - இன
சங்கம இணைப்பினால் பெருமை...

எனப் பாடி நன்கு வலியுறுத்துகிறார்.

இலங்கைத் தீவில் மகிழ்ச்சி மலரும் வழியையும் நன்கு வலியுறுத்தியுள்ளார்.

மதத்தினை ஒன்றாய் மதிப்போம் - மற்ற
இனத்தினைச் சேர்த்தே அணைப்போம்
குணத்தினால் கூடி இருப்போம் - தேசிய
உணர்வினால் ஒன்றி உழைப்போம்..

என்ற வரிகள் இன ஒற்றுமைக்கான பாதையைக் காட்டி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஔவை இலக்கியங்கள் அத்தனையும் ஔடதங்கள். ஔவையாரின் இலக்கியங்கள் மானிட குலத்திற்கு மருந்து போன்றவை என்பதை இக்கவிதை கூறுகிறது. ஔவையாரின் நூல்களை வரிசைப்படுத்திக் கூறி, அவரின் தமிழ்ப் புலமையையும் அவரின் இலக்கியங்களில் காணப்படும் செழுமையையும் எடுத்துரைக்கின்றார். அத்துடன் இக்கவிதை ஔவை இலக்கியங்கள் போற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி நிற்கிறது.

நெறிதவறா நீதிவாழ்வை நிதம் நேரில்காட்டி
அறநெறியாமிவ் விலக்கியங்கள் வாழ்வின் வழிகாட்டி
அத்தனையும் மானிடமுன்னேற்ற நல்வழித் திசைகாட்டி
அறியுள்ளங்கை நெல்லிக்கனியென நெஞ்சில்
நிலைநாட்டி...

எனும் வரிகள் ஔவை இலக்கியங்களின் பயனை நன்கு எடுத்துக் கூறுகின்றன.

வாழ்வு மலர்ந்தது வாழ்வு எவற்றால் மலர்கிறது என்பதைக் கூறும் கவிதையும் இது. கூட்டுறவில்தான் வாழ்வின் மலர்ச்சி என்பதையும் இக்கவிதை அடித்துச் சொல்கிறது. கவிஞரின் தமிழ் ஆற்றலும் கற்பனை வளமும் மிகுந்திருக்கும் எளிமையான இக்கவிதை மனதிற்கு இதத்தைத் தரும் கவிதையாகவும் உள்ளது. சமூகப் புரட்சி சிந்தனைகளையும் இக்கவிதை நன்கு வெளிப்படுத்துகிறது.

நல்லுறவாம் கூட்டுறவில் நன்மை விளைந்தது
கூட்டாளியாகக் கூடி உழைத்ததால்
பாட்டாளி வாழ்வு மலர்ந்தது...

எனும் வரிகளில் தொழிலாளர் ஒற்றுமையும் வலியுறுத்தப்படுகிறது.

சமூகத்தில் காணப்படும் பழுதுகள் சரிசெய்யப்படும் போதுதான் மனிதம் மாண்பு பெறும் என்பதையும் இக்கவிதை வெளிப்படுத்துகிறது. சமூகத்திலுள்ள மனித மாண்புக்கு எதிரான விடயங்களைப் பட்டியலிட்டு, அத்தகு தீங்குகள் இல்லாதொழியும் போது மனித சமுதாயம் மென்மேலும் மேன்மை பெறும் என்பதையும் எடுத்தியம்புகின்றது.

பாலியற் கொடுமைகள் பட்டிட வேண்டும் - அந்த
பாவிகள் நொந்தே செத்திட வேண்டும்
பெண்ணியம் கண்ணாகப் பேணிட வேண்டும்- அதற்கு
திண்ணிய நெஞ்சோடு செயற்பட வேண்டும்

எனும் வரிகள் எமது சமூகத்திலுள்ள பெண்கள்சார் கொடுமைகள் அழிய வேண்டியதன் அவசியத்தையும் அத் தகு கொடுமைகள் அழிந்து பாலின சமத்துவம் வளரும்போதுதான் மனிதம் மாண்பு பெறும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விலைபேச முடியாதது அன்பு. அவ்வன்பின் ஆழ அகலத்தை எடுத்தியம்பும் இக்கவிதை, அன்பு விலை மதிப்பற்றது என்பதையும் அகிலத்தின் ஆணிவேர் அது என்பதையும் வரலாற்றின் துணையுடன் எடுத்துவிளக்குகிறது.

பின்ன மில்லா
உயருண்மை
அன்புதான்
உருவமற்ற மொழிகளிலே சிறந்த
தன்புதான் - என்றும்
பருவமாற்ற பாதிப் படையாததும்
அன்புதான்
சமயமனைத்தும் போதிக்கும் தத்துவம்
அன்புதான்..

எனும் வரிகளில் எம்மை அன்பால் கட்டிப்போட்டுவிடுகிறார் கவிஞர்.

'பாரதி நீ மீண்டும் பிறக்காதிருப்பதே நன்று' என்று. பாரதியின் சிந்தனைகளுக்கு முரணாகச் சமூகம் மாறியுள்ளதை வெளிக்காட்டுகிறது இப்படைப்பு. சமூகத்தின் போக்கு பற்றியதான தனது ஆற்றாமையைப் பாரதியைத் துணையாக்கி கவிஞர் வெளிப்படுத்திய பாங்கு சிறப்பிற்குரியது. பாரதி இனி மண்ணில் பிறக்காமல் இருப்பதுதான் பாரதிக்கு நல்லுது என்பதற்கான காரணங்களைப் பட்டியல்படுத்துவதனூடாகச் சமூகம் பிறழ்வான போக்கில் போய்க் கொண்டிருக்கும் தன்மையை எடுத்துக்காட்டுகிறார்.

தீண்டாமை ஒழித்திடு என்றாய் - இன்று
வேண்டாமை பேசிடும் வீணர் வாழ்கிறார் நன்றாய்
வேற்றுமை முரசெங்கும் முழங்கும்
ஆற்றாமை கண்டு நீ அழுதிட வேண்டும் - அதனால்
பாரதி! நீ மீண்டும் பிறக்காதிருப்பதே நன்று

என்ற வரிகள் கவிஞரின் மனநிலை நமக்குத் தெட்டத்தெளிவாகப் புலப்படுத்தி நிற்கின்றது.

என்னென்று சொல்வது நாட்டில் நடக்கும் குழப்பங்களைப் பார்த்துப் புலம்புவதாக இக்கவிதை திகழ்கிறது. மனதிற்கு

ஒவ்வாத, நீதிக்குப் புறம்பான பல்வேறு விடயங்கள் நாட்டில் நடந்தேறுகின்றன. அதனை எதிர்த்துக் கேட்பதும் குற்றம், எழுத்தில் கேட்பதும் குற்றம். வாய்பேசாமல் மக்கள் புலம்பும் தன்மையை எதுகை, மோனைச் சுவைபட எளிய சொற்களால் வடித்துத் தந்திருக்கின்றார் கவிஞர். நாட்டில் என்னதான் நடந்தேறினாலும் எதிர்த்துக் கேட்கமுடியாத கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும் தன்மையை,

என்ன? ஏது? நடக்குதிந்த நாட்டில - என்று
சொல்ல முடியாதிருக்கு பாட்டில
எல்லாத்தையும் மெழுதிவிட்டா - ஏட்டில
எம்மப் பிடிச்சடைப்பா கூட்டில

எனும் வரிகள் நன்கு புலப்படுத்தி நிற்கின்றன.

மண்முனைப்பற்று எழிலாள்:

இலங்கையின் கிழக்குமாகாணத்தில் அமைந்துள்ள மண்முனைப்பற்று எனும் பிரதேசத்தின் புகழ்கூறும் கவிதை இதுவாகும். மரபு பா வகையில் கலித்துறையில் அமைந்த இப் பா மண்முனை பிரதேசத்தைப் பெண்ணாக உருவகித்து அதன் வளத்தையும் வரலாற்றையும் கூறி மண்வாசனையைத் தூண்டி மனதை நிறைத்துவிடுகிறது. உலகநாச்சியால் ஆளப்பட்ட சிறப்பிற்குரிய பிரதேசம் மண்முனைப்பற்று என்பதை,

மண்முனைப்பற்று இராட்சியம்
இளவரசி உலகநாச்சி கோலதோட்சி
திண்ணமுடன் சிகரம் சிறப்புற்று விளங்கிய மாட்சி

எனும் வரியில் கவிஞர் பதிவுசெய்துள்ளார். நெய்தல்,மருதம், குறிஞ்சி, முல்லை நானில வளமும் கொண்ட நற்பூமி என்றும் பல்லின மதத்தவரும் பண்புடன் வாழ்ந்திருக்கும் பிரதேசம் என்றும் மண்முனைப்பற்றின் வளங்கூறி மண்முனைப்பற்றின் எழில் முகத்தை எமது கண்முன்னே கொண்டு நிறுத்தும் பாங்கு சிறப்பிற்குரியது.

பாலோடு தயிர் நெய்யளிக்கும்
கறவையினம் பல்கிப் பெருகும்
தேனோடு முக்கனி முந்திரி
நற்கனித்தருக்கள் தழைத்து வளரம்
தெங்கோடு நுங்குநிறை பனைகள்
செறிந்துசெழித்து விளையும்
எங்கும் எத்தொழிலும்
செய்திடுதீரர்கள் நிறைந்து விளங்கும்
செந்தமிழர் இஸ்லாமியர் தாய்மொழியாலொன்றி
சமத்துவமாயிருக்க தன்மடிவிரித்தாள்
இந்திஸ்லாம் கிருஸ்தவம் இன்சுவை
முக்கனியாயிருக்க வுயர்வளித்தாள்

என்ற வரிகள் மும்முனை எழிலாளிடம் எம்மை அழைத்துச் செல்கின்றமை மறுக்கமுடியாத உண்மை.

மட்டக்களப்பின் மண்வாசம் வீசும் மற்றுமொரு கவிப் படைப்பு இதுவாகும். கணவன், மனைவி இருவருக்கிடையிலான உரையாடலாய் அமைந்த இக்கவிதையில், மட்டக்களப்பு பிரதேச வழக்குச் சொற்கள் மிக இலாவகமாகக் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. கணவன் பல்வேறு தொழில்களுக்குச் செல்லும் போது மனைவி கூறும் வார்த்தைகளை வரிகளாக்கி மட்டக்களப்பு மண்ணின் பண்பாட்டை நமது கண் முன்னே காட்சியாகப் பதிவு செய்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள ஆண்கள் புரியும் தொழில்களாக பட்டியில் பால்கறக்கப் போதல்,காலைப் பாதுகாப்பு, உரமெறியப் போதல்,பாயிழைத்தல், கதிரறுத்தல்,வீசுதல், விறகு வெட்டல், தோட்டவேலை போன்ற தொழில்களைப் பட்டியல் இடுகிறார் கவிஞர்.

பாயிழைக்கப் பன்னறுக்கக் கிரான்குளம் போறமச்சான்
திராய்கிடக்கும் புடுங்கிவாங்க சுண்டி வெகுநாளாச்சிது

எனவும்

புதுக்குடியிருப்பு பொன்விளையும் வயலுக்குள்ள
கதிரறுக்க போறநீங்க புதுருக்கதிர் கொண்டுவாங்க

எனவும் வரும் கவி வரிகள் ஆடவர் புரியும் தொழில்களைச் சுட்டி நிற்கின்றன எனலாம்.

மட்டக்களப்புப் பாரம்பரிய உணவு முறைகள் பலவற்றையும் இக்கவிதையில் கவிஞர் பதிவுசெய்துள்ளமை சிறப்பம்சமாகும். கொழுக்கட்டை, திராய்ச் சுண்டல்,கண்ணாக்கடியன் மீன், மட்டுறால் குழம்பு, மண்டுப்புட்டு, சீலாமீன் பொரியல், தாமரைக் கிழங்கு போன்ற உணவு வகைகளைக் கவிஞர் கூறியுள்ளார்.

பாலன்முனை கடற்கரைக்கு வெள்ளாப்போடபோ மச்சான்
சீலாமீன் வாங்கிவாங்க கீலமாக வெட்டி பொரிச்சுத்தாறன்

எனும் வரிகள் மண்வாசனையை மணக்கச் செய்கின்றன.

ஊருக்குள் கோயில் கதவு திறந்தால் மச்சம் விடுதல், பேய் பார்வையாதல், குறிகேட்டல், புதுக்கதிர் எடுத்து வீட்டில் கட்டுதல் முதலான மட்டக்களப்பு மரபுவழிப் பழக்கவழக்கங்களைப் பதிவு செய்துள்ளார்.

செல்வாநகர் கிழக்குக் காளிகோயில் திறந்திருக்கு
எல்லையெங்கும் மச்சமில்ல

என்ற வரிகள் இதனை வெளிக்காட்டி நிற்கின்றன.

கிராமியவாசம் வீசும் மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் பல இக்கவிதையில் கையாளப்பட்டுள்ளன.

உமலுக்க ஒருதுண்டு ஓட்டு கொழுக்கட்ட இருக்கு
மறவாம தின்னுமச்சான் மதியம்வர பசியெடுக்கா

எனும் வரிகளில் வரும் உமல் எனும் பிரதேசக் கிளைமொழி குறிப்பிடத்தக்கதாகும். (உமல் என்பது பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களைக் காவுவதற்குப் பயன்படும் ஒரு பையாகும்) இவ்வாறாகச் சமூகத்தின் மரபுகளைப் படம் பிடித்துக்காட்டும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும் பல கவிதைகளை ஆக்கி அளித்த ஆரையூர் அருளின் தமிழ் ஆளுமைப் பண்பு நயந்து போற்றுதற்குரியது என்றால் மறுப்பதற்கில்லை.