“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

 





































































மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு, “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” எனும் இவ்வாண்டிற்கான தேசிய தொனிப்பொருளின் கீழ், நேற்று 2026.10.01 வியாழக்கிழமை, பாட்டாளிபுறம் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறுவர்களின் மனநல மேம்பாடு, கல்வி வளர்ச்சி மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி சிறார்களின் கண்கவர் நடனங்கள், பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று, வருகை தந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

இதனையடுத்து, சிறார்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் வினோத உடைப் போட்டி, பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், சமுர்த்திப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான சிறார்கள் கலந்துகொண்டனர்.

எதிர்காலத்தின் தூண்களாக விளங்கும் சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் உடல், உள மற்றும் கல்வி வளர்ச்சிக்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. திருச்செல்வம் மேகராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது