குருக்கள்மடம் சந்தேக மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

 






மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த. பிரதீபன் தலைமையில் இடம்பெறும் இந்த அகழ்வுப் பணிகளில் காவல்துறையினர், தடயவியல் அதிகாரிகள், அகழ்வாராய்ச்சித் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையை முடித்துத் திரும்பிய 167 யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் முன்வைக்கப்படும் சந்தேகத்தின் அடிப்படையில் இந்தப் பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற முதற்கட்ட அகழ்வில் குறிப்பிடத்தக்க தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அகழ்வின்போது கிடைக்கும் தடயங்கள் மற்றும் அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.