“தேர்தலுக்கு அப்பாலும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு – பாராளுமன்ற ஒன்றியத்தில் முக்கிய கலந்துரையாடல்”

 







இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம், அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்காக WFD நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆதரவு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இளம் தலைமுறையினரை அரசியல் செயற்பாடுகள் மற்றும் கொள்கை வகுப்புச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தேர்தல்கள் நிறைவடைந்த பின்னரும் இளைஞர்களை தொடர்ச்சியாக அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களுடன் இணைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இளைஞர்கள் எதிர்கொள்ளும் தொழிலின்மை உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை நோக்கி நகர்வதற்கும், இளைஞர்களின் தலைமைத்துவ ஆற்றலையும் அரசியல் பங்கேற்பையும் மேம்படுத்துவதற்குமான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இளைஞர்களை நாட்டின் ஜனநாயக மற்றும் கொள்கை வகுப்புச் செயற்பாடுகளில் அர்த்தமுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கு இக்கலந்துரையாடல் முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.