சுகாதார அமைச்சர் நளிந்த, ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைக்கு விசேட பாராட்டு! செயலாளர் அனில் ஜாசிங்க நேரில் சென்று கையளிப்பு!!

 



( வி.ரி.சகாதேவராஜா)

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 
ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் தன்னலமற்ற இலவச இதய சிகிச்சைகள் பணிக்காக விசேட பாராட்டு விருதினை வழங்கியுள்ளார்.

அமைச்சரின் விசேட பாராட்டு விருதினை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க நேற்று முன்தினம் மட்டக்களப்பு கிரான்குளத்திற்கு நேரடியாக சென்று கையளித்தார்.

மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வரும் இதயநோய் சிகிச்சைச் சேவைகள் மற்றும் 4,600-க்கும் மேற்பட்ட இலவச Cardiac Cath Interventions சிகிச்சைகளே சுகாதார அமைச்சினால் பாராட்டப்பட்டுள்ளன.

கடந்த வருடம் சுகாதார அமைச்சர் நளிந்த இந்த வைத்தியசாலைக்கு நேரடியாக செய்து பார்வையிட்டபோது அதன் சேவைகளையிட்டு வியந்தார்.
அதன் காரணமாக தற்பொழுது அந்த பாராட்டு விருதை வழங்கி வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 நேற்று முன்தினம் செயலாளர் விஜயம் செய்த போது ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் பொது முகாமையாளர் டேவிட் சில்வெஸ்டர் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

விஜயத்தின்போது வைத்தியசாலையில் இயங்கி வரும் இலவச Cardiac Cath Lab சேவைகள், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள 4,600-க்கும் மேற்பட்ட இலவச இதய Cath Interventions மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு இதய சிகிச்சைச் சேவைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்க உள்ளிட்டோர் வைத்தியசாலையின் இலவச இதய சிகிச்சைச் சேவைகளை பார்வையிட்டதுடன், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தனிப்பட்ட முறையில் இந்த வைத்தியசாலையின் சேவையை வரவேற்று பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமூகப் பொருளாதாரப் பாகுபாடுகளின்றி அனைவருக்கும் சமமான முறையில் தரமான இதய சிகிச்சையை இலவசமாக வழங்கி வரும் இச்சேவை, கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

மேலும், வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள Operating Theatre Complex மற்றும் Intensive Care Unit (ICU) ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளும் பார்வையிடப்பட்டன.

 எதிர்காலத்தில் மேலும் பல சிறப்பு சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.


ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் சேவைகள் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களின் அருளாசி மற்றும் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 வைத்தியசாலையின் தலைவர் திரு. தீபல் விக்ரமசிங்க, முன்னாள் தலைவர் திருமதி பென்னி ஜெயவர்தன சமகாலத்தில் நிருவாக சேவைகளை திறம்பட முன்னெடுத்து வரும் பொது முகாமையாளர் டேவிட் சில்வெஸ்டர் மற்றும் பணிப்பாளர் சபையினர் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்புடனும் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம், கல்முனை ஆதார வைத்தியசாலை, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகளுக்கு இந்நிறுவனம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

“ஒரே உலகம் – ஒரே குடும்பம்” என்ற உயரிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவையை வழங்கி வரும் ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் இதுவரை 4,600-க்கும் மேற்பட்ட இலவச Cardiac Cath Interventions மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.