மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா!

 


























































editor


மட்டக்களப்பு, நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஆசிரியர் தின விழா, 2025.10.09 வியாழக்கிழமை மாலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக, பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தலைமையுரையைத் தொடர்ந்து விழாவின் ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.

  மாணவர் தலைவி ஜே. நிஷாந்தினி தலைமையில் இடம் பெற்ற   இவ்விழாவில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) நிதர்ஷினி மகேந்திரகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.  கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் எஸ். தயாபரன் , மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் கல்லூரி அதிபர் எஸ். தருமதாஸ்,   சிறப்பு விருந்தினர்களாக     தரிசனம் பாடசாலைத் தலைவர் என். இதயராஜன் மற்றும் முன்னாள் விசேட கல்விப் பணிப்பாளர் முருகு தயானந்தன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

ஆசிரியர்களின் பங்களிப்பை எடுத்துரைத்த சர்வதேச ஆசிரியர் தினத் தொனிப்பொருள்

2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாக, “ஆசிரியர்களுடன் துணை நிற்றல்: இத்தொழிலைப் பாதுகாத்தல், அதன் நிலையை உயர்த்துதல் மற்றும் நமது எதிர்காலத்தை வடிவமைத்தல் ஆகியவற்றில் 60 ஆண்டுகள்” என்பது அமைந்துள்ளது.

யுனெஸ்கோ (UNESCO) மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) இணைந்து 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி ஆசிரியர்களின் உரிமைகள், தகுதிகள் மற்றும் பணிச்சூழல் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரையை ஏற்றுக்கொண்டன. அதன் 60ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் அமைந்துள்ளது.

வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் களைதல், அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், ஆசிரியர் தொழிலின் மதிப்பையும் அந்தஸ்தையும் உயர்த்துதல் மற்றும் சமூக மாற்றத்திலும் உலகளாவிய கல்வி வளர்ச்சியிலும் ஆசிரியர்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரித்தல் ஆகிய முக்கிய அம்சங்களை இத்தொனிப்பொருள் வலியுறுத்துகிறது.

மாணவர்களின் வாழ்வில் அறிவொளியை ஏற்றி, அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக வடிவமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டுவதும், அவர்களின் பொறுப்புகளையும் பங்களிப்புகளையும் சமூகத்திற்கு எடுத்துரைப்பதும் அனைவரினதும் கடமையாகும்.

அந்த வகையில், நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலைச் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின விழா, ஆசிரியர்களின் சேவையைப் போற்றும் வகையிலும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் சிறப்பாக அமைந்திருந்தது.

விழாவை முன்னிட்டு பாடசாலைச் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள், நடனங்கள் மற்றும் விழிப்புணர்வு நாடகம் ஆகியன அரங்கேற்றப்பட்டன. ஆசிரியர்கள் வழங்கிய பாடல்களும் மாணவியர்கள் பாடிய இனிமையான பாடல்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிதிகளால் பாராட்டப்பட்டதுடன், அவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

ஆசிரியர்களின் சேவையை மதிப்பதுடன், விழிப்புலனற்ற மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணரும் ஒரு சிறப்பான நிகழ்வாக இவ்வாசிரியர் தின விழா அமைந்திருந்தது.