மட்டக்களப்பு அருணோதயம் வித்தியாலயத்திற்கு Band வாத்தியக் கருவிகள் வழங்கி வைப்பு!

 











பாராளுமன்ற உறுப்பினர் கே. பிரபுவின் முயற்சியால் பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்பு

மட்டக்களப்பு அருணோதயம் வித்தியாலயத்தின் Band  இசைக்குழுச் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கே. பிரபு அவர்களால்  Band  இசைக்குழு வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அருணோதயம் வித்தியாலயத்தின் பாடசாலை   Band     இசைக்குழுவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும், மாணவர்களின் இசைத்திறன்களை மேம்படுத்துவதற்கும் தேவையான வாத்தியக் கருவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவி கோரி பாடசாலை நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் சுமார் 305 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்ற நிலையில், இசைக்குழுச் செயற்பாடுகள் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும், கலைத்திறன் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இசைக்குழுவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வாத்தியக் கருவிகள் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி நடவடிக்கைகளுடன் இணைந்த கலை மற்றும் இசைச் செயற்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை, மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய ஆதரவாக அமைந்துள்ளது.