மட்டக்களப்பு இந்துக் கல்லூரி Band வாத்தியக் குழுவுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு!

 
























பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவி

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் Band வாத்தியக் குழுவினருக்குத் தேவையான இசைக்கருவிகள், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டு, உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு, குறித்த இசைக்கருவிகளைப் பாடசாலை நிர்வாகத்தினரிடமும் மாணவர்களிடமும் கையளித்தார்.

பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார மற்றும் இசைத் திறன்களை மேம்படுத்துவதுடன், கல்லூரியின் Band வாத்தியக் குழுவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இசை உள்ளிட்ட இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும், குழு ஒத்துழைப்புக்கும், தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கும் துணைபுரியும் நிலையில், இவ்வாறான உதவிகள் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு உறுதுணையாக அமைகின்றன.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் இசைத்திறன்களை வளர்ப்பதற்கும், பாடசாலையின் கலைச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் வழங்கப்பட்ட இந்த உதவியைப் பாராட்டிய பாடசாலை நிர்வாகத்தினரும் மாணவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.