இலங்கையில் வருடாந்தம் ஏறத்தாழ 6000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பது முக்கிய பிரச்சினையாக காணப்படுகிறது.
இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதையும், அது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் சுகாதார அமைச்சுடன் இணைந்து விசேட தேசிய வேலைத்திட்டத்தை நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில், அண்மையில் கூடிய ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
மார்பகப் புற்றுநோயின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இங்கு விளக்கிக் கூறினர்.
வருடாந்தம் இலங்கையில் ஏறத்தாழ 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாகச் சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பது முக்கிய பிரச்சினையாக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கமைய, நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் சுகாதார மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் நேரடியாகவும் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இளஞ்சிவப்பு நிறச் சின்னங்கள் மற்றும் ஆடைகளைப் பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இளஞ்சிவப்பு மாதத்திற்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள், பெருந்தோட்டப் பகுதிகள், நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குறைந்தளவில் பங்கேற்பு காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை சுவநாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
தற்போது 35 – 45 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 50 சதவீதமானவர்களே சுவனாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதால், ஏனைய பெண்களையும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பிரதான மையங்களில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் செயற்படும் மகளிர் சங்கங்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரை ஒருங்கிணைத்து, 35–45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் விரிவான வேலைத்திட்டமொன்றை அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஜனவரி மாதத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னெடுப்பில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பாலின அடிப்படையிலான வரவு - செலவுத் திட்டமிடல் மற்றும் பராமரிப்புப் பொருளாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் வரவு - செலவுத் திட்டச் செயன்முறையில் பாலின உணர்திறன் கொண்ட கொள்கைகளை உள்ளடக்குதல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப ஆலோசனை உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கான சட்டம், பராமரிப்புக் கொடுப்பனவுகள் தொடர்பான சட்டம் மற்றும் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, நீதி அமைச்சுடன் இணைந்து அவற்றுக்கான திருத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.





