கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை (03) மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள விஞ்ஞான சுகாதாரப் பராமரிப்பு பீடத்தின் அரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
2026ஆம் ஆண்டுக்கான இப்பட்டமளிப்பு விழா, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில், பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் சி. மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன கலந்துகொண்டார்.
இப்பட்டமளிப்பு விழாவில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகப் பணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் சுந்தரேசன், விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி, பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் இனிய இசை அணிவகுப்புடன் அதிதிகளும் பட்டதாரி மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுமார் 57 துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 2,369 பேருக்கு இந்நிகழ்வில் பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்புத் தகைமைகளைப் பெற்ற மாணவர்களுக்கு தங்க விருதுகள் உள்ளிட்ட சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பட்டம் பெற்ற மாணவர்களின் கல்விச் சாதனையைப் பாராட்டும் இந்நிகழ்வு, அவர்களின் பல்கலைக்கழக வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்லாக அமைந்ததுடன், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் பெருமைமிகு தருணமாக அமைந்தது.





