மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் திறந்தநாள் விழாமற்றும் 27 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.



 









































  























EDITOR


மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியின் திறந்தநாள் விழாவும், குறுகியகாலக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன.

கல்லூரியின் அதிபர் திரு. M. சோமசூரியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. ரவி பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது கல்லூரியின் உப அதிபர் திருமதி J. நமோநிதி, பதிவாளர் திரு. T. கங்கேஸ்வரன், தொழிற்துறைப் பகுதி தலைவர் திரு. S. சிவராஜ், பொறியியற்துறைப் பகுதித் தலைவர் திரு. S. உமேஸ்காந், வணிகத்துறைப் பகுதித் தலைவர் திரு. A. சதானந்தன் உள்ளிட்ட கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

விருந்தினர்களின் வரவேற்பு, மங்கள விளக்கேற்றல், தேசிய கீதம் இசைத்தல் நடன ஆற்றுகை ஆகிய நிகழ்வுகளுடன் விழா ஆரம்பமானது. தொடர்ந்து வரவேற்புரையும் தலைமையுரையும் இடம்பெற்றன.

இதன்போது குறுகியகால அலுமினிய வேலைப்பாடுகள் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 27 மாணவர்களுக்கான சான்றிதழ்களைப் பிரதம அதிதி வழங்கி வைத்தார். தொடர்ந்து பிரதம அதிதியின் உரையும், மாணவர்களின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றன. தொழிற்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ் (NVQ) முறைமை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய அம்சமாக மாணவர்களின் திறமைகளையும் தொழில்நுட்ப அறிவையும் வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவசாயம், வாகனப் பொறியியல், கட்டடக்கலை மற்றும் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மின்னியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த ஆக்கபூர்வமான படைப்புகளும் செய்முறை விளக்கங்களும் கண்காட்சியில் இடம்பெற்றன.

இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 25 பாடசாலைகளைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய சுமார் 1,500 மாணவர்களும் ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.

மாணவர்களுடன் பாடசாலை அதிபர்களும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. ரவியும் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களின் படைப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

குறிப்பாக, தொழிற்கல்வி தொடர்பான தெளிவான விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் கல்லூரி மாணவர்கள் வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்கினர். இதனால் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இலங்கையில் முறையான தொழில்நுட்பக் கல்வி 1893ஆம் ஆண்டு கொழும்பு மருதானையில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழில்நுட்பக் கல்லூரிகள் நிறுவப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியும் கிழக்கு மாகாணத்தின் தொழிற்கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றது.

முழுநேர மற்றும் பகுதிநேரக் கற்கைநெறிகளை முன்னெடுத்து வரும் இக்கல்லூரியில் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கணினி வன்பொருள் தொழில்நுட்பம், வாகனப் பொறியியல், மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பம், வாகன மின்சாரவியல், மின்சாரம் மற்றும் இலத்திரனியல், குளிரூட்டி மற்றும் காற்றுப் பதனாக்கி பராமரிப்பு, சூரிய சக்தித் தொழில்நுட்பம், கட்டுமானம், அலுமினிய வேலைப்பாடுகள், வெல்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ் (NVQ) தரத்தில் கற்கைநெறிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தினால் வழங்கப்படும் முழுநேர NVQ கற்கைநெறிகள் இலவசமாகப் பெறக்கூடிய வாய்ப்பையும் கொண்டுள்ளன.

பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் தமது எதிர்காலத் தொழில் வாய்ப்புகளைத் திட்டமிடுவதற்கும், தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் இத்தகைய திறந்தநாள் நிகழ்வுகள் பயனுள்ள வழிகாட்டலாக அமைகின்றன.