2027 கல்வியாண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் – அச்சிடும் பணிக்கு அமைச்சரவை அனுமதி

 


2027ஆம் கல்வியாண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத் தொகுதிகளை அச்சிடுவதற்கான பெறுகை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, 2027ஆம் ஆண்டில் 1, 2 மற்றும் 6ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 421 வகையான பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத் தொகுதிகள் அச்சிடப்படவுள்ளன. இதற்காகக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறையின் கீழ் கோரப்பட்ட பெறுகைகளுக்கு 31 அச்சக நிறுவனங்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன.

குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த உயர்மட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, 21 அச்சக நிறுவனங்களுக்குச் சேர்த்து 1,614.69 மில்லியன் ரூபா (பெறுமதி சேர் வரியில்லாமல்) செலவில் இந்த அச்சிடல் ஒப்பந்தத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.