மட்டக்களப்பு தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்களித்து வரும் திரைப்பட இயக்குநர் கீர்த்திசீலன் கிஷாந்த், 2026ஆம் ஆண்டுக்கான அரச இளம் கலைஞர் விருதைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
குறும்படத் துறையில் அவர் ஆற்றிவரும் கலைப்பணியைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா, 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள கோல்டன் ரிவர் (Golden River) ஹோட்டலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மண்ணின் கலைத்திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், இவ்வாண்டு இளங்கலைஞர் விருதுக்காக 17 கலைஞர்களும், வித்தகர் விருதுக்காக 13 கலைஞர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன், பரிசுக்குரிய நூல்களாக 11 நூல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
திரைப்படத் துறையில் பன்முக ஆளுமையாகத் திகழும் கீர்த்திசீலன் கிஷாந்த், இயக்குநர் என்ற அடையாளத்துடன் மட்டும் நின்றுவிடாமல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசையமைப்பு, ஒலிப்பதிவு, ஒலி விளைவுகள், நடிப்பு மற்றும் கலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த 13 ஆண்டுகளாக மட்டக்களப்பு தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்களித்து வரும் அவரது கலைப்பயணத்திற்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், பிராந்தியத் திரைப்படக் கலைத்துறைக்கு மேலும் ஊக்கமளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கலை, இலக்கிய மற்றும் படைப்பாற்றல் துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விருது வழங்கும் நிகழ்வில், வித்தகர் விருது, இளங்கலைஞர் விருது, பாடல் போட்டிகளுக்கான விருதுகள், கலை இலக்கிய அறிவுப் போட்டிகளில் வெற்றிபெறும் கலை மன்றங்களுக்கான விருதுகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கப் போட்டி விருதுகள் எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
குறும்படத் துறையில் தனது திறமையாலும் தொடர்ச்சியான முயற்சியாலும் பயணித்து வரும் கீர்த்திசீலன் கிஷாந்துக்குக் கிடைத்துள்ள இந்த அரச அங்கீகாரம், மட்டக்களப்பின் இளம் திரைப்படக் கலைஞர்களுக்கு நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளிக்கும் வெற்றியாகும்.





