ஆரையம்பதி கோவில்குளம் உலக நாச்சியார் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை அவசியம் – சிறிநாத் MP

 



மட்டக்களப்பு, மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில்குளம் உலக நாச்சியார் தொடர்பான வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் வலியுறுத்தியுள்ளார்.

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அவர், குறித்த வரலாற்றுத் தளத்துடன் தொடர்புடைய சான்றுகள் உரிய முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் அவை சேதமடைவதுடன், மாற்றியமைக்கப்படும் நிலையும் உருவாகக்கூடும் என சுட்டிக்காட்டினார்.

பல தலைமுறைகளின் வரலாற்றையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் இவ்வாறான சான்றுகள் பாதுகாக்கப்படுவது தற்போதைய தலைமுறையின் பொறுப்பு மட்டுமல்லாது, எதிர்கால சந்ததியினருக்கான முக்கிய வரலாற்றுக் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, கோவில்குளம் உலக நாச்சியார் தொடர்பான வரலாற்றுச் சான்றுகளை உரிய முறையில் ஆவணப்படுத்தி, பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என சிறிநாத் MP வலியுறுத்தினார்.