மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ‘Hands and Heritage East – 2026’ கண்காட்சி கோலாகல ஆரம்பம்

 






















































 செய்தி ஆசிரியர் 



மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கிழக்கு மாகாணத்தின் கிராமிய கைவினைப் பொருட்கள், பாரம்பரியக் கலைகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஒரே தளத்தில் காட்சிப்படுத்தும் ‘Hands and Heritage East – 2026’ கைவினைப் பொருட்கள் மற்றும் வர்த்தகக் கண்காட்சி வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமானது.

கிழக்கு மாகாண கிராமியத் தொழில்கள் திணைக்களம், கிராம அபிவிருத்தித் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம், மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஆகியன இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

கிழக்கு மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் திரு. இசட்.ஏ.எம். பைசல் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வர்த்தகச் சந்தை மற்றும் கண்காட்சியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. கே. குணநாதன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி மேனகா புவிகுமார், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவம் பாக்கியநாதன், ஆணையாளர் தனஞ்சயன் உள்ளிட்ட பலர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கிராமிய கைவினைப் பொருட்கள், பாரம்பரியக் கலைப் படைப்புகள், கலாசாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் உற்பத்திகள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பிரதேசங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை நேரடியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்வதற்கான வாய்ப்பும் இக்கண்காட்சியின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிராமியத் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், அவர்களின் தொழில் முயற்சிகளை மேலும் ஊக்குவித்து, கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய கைவினை மற்றும் உள்ளூர் உற்பத்திகளை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்லும் அடித்தளமாகவும் ‘Hands and Heritage East – 2026’ கண்காட்சி அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கண்காட்சி கிழக்கு மாகாணத்தின் பண்பாடு, பாரம்பரியம், உள்ளூர் திறமை மற்றும் தொழில் முயற்சிகளை ஒரே தளத்தில் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.