”தவறு செய்த ஒருவர் தான் செய்த தவறு குறித்து அறிந்திருப்பதும் அதனால் அவருக்கு பயம் ஏற்படுவதும் நியாயமானதே” என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய அபயராம புராதன விகாரையில் நடைபெற்ற “வெஹி பிரித்” நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் தாம் கைது செய்யப்படலாம் என நாமல் ராஜபக்ச கூறியுள்ள கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பின், அதற்கு முன்னதாகவே அவர்கள் கூட்டமொன்றை நடத்திக்கொள்ள முடியும். நாமல் ராஜபக்ச, தவறு செய்த ஒருவராக இருந்தால் அதனால் அவருக்கு பயம் ஏற்படுவது நியாயமானதே.
22ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளது.
எவ்வாறாயினும், 22ஆவது திருத்தத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தாம் எதிர்பார்க்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் தெளிவான நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ள முடியும்.” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





