மட்டக்களப்பு நகரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மர்மநபர் – சிசிரிவியில் காட்சிகள் பதிவு

 



மட்டக்களப்பு நகரின் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதியில், பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பறித்துச் செல்ல முயன்ற சம்பவம் சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.

இரு பெண்கள் குறித்த வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை பின்தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயற்சித்துள்ளார்.

எனினும், அவரது முயற்சி முழுமையாக வெற்றியளிக்காத நிலையில், அவர் உடனடியாக மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.