மட்டக்களப்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் 5ஆம் நாளை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான செஸ் விளையாட்டுப் பயிற்சிப்பட்டறை இன்று மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சிப்பட்டறையானது மட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் திரு. நாகராஜா தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வர் அவர்கள் கலந்துகொண்டார். மேலும், கௌரவ அதிதிகளாக மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்களான தயாளகுமார் கௌரி மற்றும் சீனித்தம்பி ஜெயந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சிப்பட்டறைக்கான வளவாளராக இலங்கை செஸ் சம்மேளனத்தின் செஸ் பயிற்றுவிப்பாளர் திரு. சத்துரங்க வுத்திக்க அவர்கள் கலந்துகொண்டு, செஸ் விளையாட்டின் அடிப்படை நுட்பங்கள், விளையாட்டு முறைகள் மற்றும் ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களுக்கு செஸ் பயிற்சிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக பயிற்சிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பொது நூலகத்தின் பொது நூலகர் செல்வி. த. சிவராணி அவர்களுடன், மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த செஸ் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
மாணவர்களிடையே சிந்தனைத்திறன், திட்டமிடும் ஆற்றல், கவனக்குவிப்பு மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் செஸ் விளையாட்டின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, பாடசாலை ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





